பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/223

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

211



அறியாமையில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, இறைவனைத் தேடாது. தேடினாலும் அவன் அகப்படுவதில்லை. ஆதலால் கருணையுடைய இறைவன் உயிர்க்குயிராகப் புகுந்து நின்றருளி ஆட்கொள்கின்றவன். இறைவன் ஆன்மாவினுள் உயிர்க்குயிரதாக எழுந்தருள்வது, இருள் கடிந்து எழுகின்ற ஞாயிறு போன்றது. அறியாமையின் பாற்பட்டு சாக்கை நனைத்துத் தூக்குமாப் போலே வினைகள், செயல்கள் பலவற்றைச் செய்து கொண்டும் அவ்வினைகள், செயல்களின் ஈட்டல்கள்- இழப்புக்கள், இன்பம்-துன்பம் ஆகிய உணர்வுகளில் சிக்கிக் கொண்டும் மத்துறு தயிர்போலச் சுழன்று வினையாகவே ஆகிக் கிடக்கும்பொழுது- ஆன்மபோதத்தில் திளைக்கும்போது இறைவன் ஆன்மாவின் விருப்பம் அறியாமல் அவனே புகுந்து ஆட்கொள்ளுதல் இயல்பு- கருணை.

அறியாதார் மாட்டு அறிவுடையோர் வெறுப்புக் கொள்ளலாகாது. அன்போடு பழகி, அறிவு தருதல் வேண்டும். மாணிக்கவாசகர் தம்மை அறிவிலாதவர் என்று கூறிக்கொள்ளும் இடங்கள் பலப்பல. அறிய வேண்டுவனவற்றை அறிதலே அறிவுடைமை. பலருக்கு உலகம் தெரியும். ஆனால், அவர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. இத்தகையோருக்குத் தெரிந்ததெல்லாம் சுயநலம் தான். அதுவும் நிர்வாணமான சுயநலம். வெறுப்பனவே செய்யும் வாழ்க்கைப் போக்கு. இத்தகைய வாழ்க்கைப் போக்கு மாறவேண்டுமாயின் அறியவேண்டியதை அறிதல் வேண்டும். ஆன்மாக்கள் அறிய வேண்டியதை அறியுமாறு செய்து அருள்பாவிக்கவே இறைவன் சிவன் எம்பிரான் ஆலமர். செல்வனாக எழுந்தருளி அறிவித்து உணர்த்து கின்றான்.

விடுதலை பெறுதல் வீடு. வீட்டினை “வானோர்க்கு உயர்ந்த உலகம்” என்று திருக்குறள் கூறும். வானுலகம் பதவிகள் உலகம். பதவிகளும் மனிதனை மயக்குவனவேயாம். பதவிகள் மனிதர்களைப் பைத்தியமாக்கிவிடும். வீடு பற்றிய