பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11


திருவாசகத்தில் இச்சொல் இருகோணங்களில் எடுத்தாளப் பெறுகின்றது.

“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து
நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
விழைகின்றேன்”

இம்மணிவாசகத் திருவார்த்தையில் ‘புகுந்து’ என்பது மணிவாசகரின் செயலாக வருகிறது. இதற்குக் கள்ளத்தனம் என்று பொருள் கொள்ளும் அடிகள்,

“வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன் என்பாய் போல்”

என வரும் தொடருக்குப் பொருள் காணும்போது "புகுதல் என்பது வரவேற்பு இல்லாத இடத்தில் வலிந்து செல்லுதல் ஆகும்” என உரை விளக்கம் கண்டீருப்பது நினைந்தின்புறத்தக்கது. (பக்கம் 26)

நாயன்மார்களின் வரலாறுகளில் தோய்ந்த மனம் உடையவர்களாக விளங்கிய அடிகள் அவர்தம் வாழ்வியல் உண்மைகளை இருபதாம் நூற்றாண்டுச் சமுதாயம் விழிப்புணர்வு பெறுமாறு செயல்முறைப்படுத்திக் காட்டினார்கள்.

நாயன்மார்களின் குருபூசையைக் கொண்டாடி மகிழ்ந்தால் மட்டும் போதாது என்று எடுத்துக் கூறிய அடிகளார் அவர்களின் வாழ்வியல் அடிப்படைக் கொள்கைகளை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தையும் வகுத்து வழங்கினார்கள்.

சமயகுரவர்கள் நால்வர் வரலாறுகளில் அப்பரடிகள் வாழ்வியற் கொள்கைகளைத் தம் வாழ்விலும் நடைமுறைப் படுத்தினார்கள். ஆனால், மணிவாசகர் வாழ்வும் சுந்தரர் வாழ்வும் அடிகள் வாழ்க்கையில் மிக மிக உயர்ந்த அருளியல் வாழ்வாகக் கருதப்பெற்றன.

அப்பரடிகள், சுந்தரர், மணிவாசகர் ஆகிய மூவர் வாழ்வியலையும் பேசும்போதும் நினைக்கும் போதும் விளக்கும் போதும் அடிகளின் கண்களில் நீர்மல்கும். அப்பரடிகளைப் போல ஒரு தனிமனிதன் வாழ முடியும் என்ற எண்ணம் மகிழ்ச்சியில் வெளிப்படும் கண்ணீராக மலரும். ஆனால் மணிவாசகர் வரலாற்றையும் சுந்தரர்