பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



“புவனியில் சேவடி தீண்டினன் காண்க”

“கண்ணால் யானும் கண்டேன் காண்க”

என்றருளியுள்ளமையால் அறிக. கண்கள் அறிவுப் புலனுடன் தொடர்பு கொள்ளவில்லையானால் காட்சி நிகழ்ந்தாலும் பொருள் புரியாது. பொருளைப் பற்றியதாகக் காட்சியமையாமல் போய்விடும். சிந்தனை செய்து தெளிந்து அறிவால் அறிந்து உணர்ந்து அனுபவித்த பிறகுதான் கடவுள், கண் காட்சிக்குப் புலனாகும். இது சமய அனுபவ நெறி!

அறிவு என்பது கல்வி மட்டுமல்ல, கல்வியின் பயனை அறிவு, கற்றவர்களிலும் மூடர்கள்- அறிவில்லாதவர்கள் உள்ளனர். ஒலி நாடாப்போல ஒப்பிப்பர்; அனுபவமும் இருக்காது செயலும் இருக்காது; ஒழுகலாறும் இருக்காது; நான்முகன் வேதங்களை நன்றாகப் பயின்றவன். வேதங்களுக்கு நாயகன், கலைமகள் நான்முகனின் மனைவி. நான்முகனின் நாவிலேயே இருக்கிறாள். ஆயினும் என்? சமய ஞானம் இல்லையே! பிரணவத்தின் பொருள் தெரியாமல் திருமுருகன் கையால் குட்டுப்பட்டவனாயிற்றே!

நான்முகன் கல்வியின் துணை கொண்டு இறைவன் திருமுடியைக் கண்டு வருவதாகக் கூறினான். சூளுரைத்தான். அன்னத்தின் உருவம் கொண்டு முடியைத் தேடி வானோக்கிப் போனான். திருமால் செல்வத்தின் அதிபதி. திருமகள் கணவன். இறைவன் திருவடியைப் பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பதமலரைக் கண்டு வருவதாகச் சூளுரைத்தான்; பன்றியின் உருவெடுத்தான்; நிலத்தைத் தோண்டிக் கொண்டு கீழ் நோக்கிப் பயணமானான். அறியாமை ஆரவாரம் செய்யும்; அகங்காரம் காட்டும். எப்போதும் அறியாமை மேல்நோக்கிய நிலையிலேயே இருக்கும்! செல்வன் ஒளிவான்; மறைவான்; யாருக்கும் புலப்படாமல் செயல் செய்வான்; செல்வத்தை நிலத்தில் புதைத்து வைப்பான். வரலாறு பொருத்தமாக இருக்கிறது.