பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

235


இப்பாடலின் மூலம் நாம் உணர்வது கொடிக்குக் கொம்பு இன்றியமையாததுபோல, உயிருக்குத் திருவருட் சார்பு பற்றுக்கோடு. கொடி என்றமையால், கொம்பில் ஏறிப் படர்வதற்கு உரியதகுதிப்பாட்டை அடைந்த ஒன்றினைத்தான் கொடி என்று அழைப்பது மரபு. படரும் தகுதி பெறாமல் குழியளவிலேயே இருப்பதையோ அல்லது முளைக்காமல் மக்கி மண்ணில் மறைந்து கிடக்கும் ஒன்றினையோ கொடி என்று குறிப்பிடுவதில்லை. இங்கு கொடிபோல அலமந்தனன் என்று உயிரைக் கொடி போல என்று குறிப்பிடுவதால் உயிர் மலைநீக்கம் பெற்று திருவருட் சக்தியின் பதிவு பெற்று (சத்தினி பாதம்) இறைவனுடைய திருவருளைச் சார்ந்து நின்று ஒழுகுதற்குரிய தகுதிப்பாட்டை அடைந்திருக்கிறது என்பது பெறப்படுகிறது. கொம்பரில்லாக் கொடி என்ற உவமை அழகிய உவமை! சிறந்த தத்துவ விளக்கத்தைத் தரும் உவமை! நாமும், கொழு கொம்பில்லாக் கொடியாக அலமந்தழியாமல் இறைவனுடைய திருவருட் சார்பெனும் கொம்பினைப் பற்றிப் படர்ந்து உய்தி பெற வேண்டும். கொம்பில் படரும் கொடிகள் தமது மெல்லிய உறுப்புக்களால் கொம்பை இறுகச் சுற்றிக் கொண்டு கொம்போடு இணைந்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல, நாமும், நம்முடைய உயிரை- ஆன்மாவை “கன்றாப் பூர் நடு தரி” என்று அப்பரடிகளால் குறிக்கப்பெறும் கொம்பினைத் தழுவிச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளவேண்டும். கொம்பினைத் தழுவிய கொடிபோல, இம்மை மறுமை இன்பங்களைப் பெற்றுத் தழைத்து விளங்க முயற்சிப்போமாக!

நாங்கூழ்

சிவஞானத்திற் சிறந்த-அறிவாற் சிவனே ஆய மாணிக்கவாசகப் பெருமான் மிக்குயர்ந்த தத்துவங்களை மிக எளிய உவமைகளால் விளக்குகின்றார். உயர்ந்த அறிவு