பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடுமையாக இருக்கும். ஆனால், உயர்ந்த அறிவோடு அனுபவமும் இருக்குமானால் நிச்சயமாக அந்த அறிவு எளிய வடிவம் பெறும். மாணிக்கவாசகர் சிறந்த அனுபவம் உடையவர்.

நாங்கூழ், உழுத நிலங்களிடையே ஊர்ந்து திரியும் புழு-எலும்பில்லாதது மெல்லிய தசைகளிலேயே ஆயது. ஆயினும், உழவியல் தொழில் வேளாண்மை செய்யும் குடிமக்களுக்குப் பெருந்துணை செய்வது; மண்ணைக் கிண்டி வளமுறச் செய்வது; அதன் எச்சில் பட்ட மண் நல் உரமுடையது-பல் வளங்கொழிப்பது என்று உழவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள். ‘உழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து’ என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பேசுகின்றார்.

நாங்கூழ் புழுவோடு உயிரை உவமிக்கின்றார். நாங்கூழ் பூச்சியைப்போல அன்பினால் தகுதிப்பாடடையாத உயிர்கள் எலும்பில்லாப் புழுக்களைப் போன்றனவேயாம் மனித உயிர்கள், பயனுடையன; மனித உயிர்களின் அறிவும் ஆற்றலும் உலகத்திற்கும் பயனுடையன-இறைமைத் தன்மைக்கும் பயனுடையன. கழனிகளுக்குப் பயன்தரக்கூடிய நாங்கூழ் எறும்புகளிடையே அகப்பட்டுக்கொண்டது; எறும்புகள் நாங்கூழ் புழுவை அரித்துத் தின்னுகின்றன. இக்கருத்தினை உயிரியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அன்பு என்ற எலும்புரம் பெறாத உயிர் தன்னல வேட்கையின் நிலைக்களனாக இருக்கும். எலும்பில்லாத உடம்பையுடைய நாங்கூழ் புழுவை எறும்புகள் சுலபமாக அரித்துத் தின்பது போல, அன்பில்லாத உயிர்களைப் புலன்கள் அரித்துத் தொல்லைப்படுத்தும். நாங்கூழ் புழுவை எறும்பு அரித்தல் மூலம் அதன் வடிவைச் சிதைக்கிறது-பயன்படு தன்மையை அழிக்கிறது. அதுபோல, புலன்களால் அரிக்கப்பெறும் உயிர்கள் உயிர்களின் இயற்கைத் தன்மைத்தாய வளர்தல், பயன்பெறுதல், நிறைவு பெறுதல் ஆகிய தன்மைகளினின்றும் அழிகின்றன.