பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்வளிக்கும் இறைவனுடைய பாதுகாப்பில் அமர்ந்தால் அவர்களை யாரும் தாக்க முடியாது; தாக்கினால் தலைவன்-இறைவன் பாதுகாப்பான். “நமன் தமரும் இவன் தமர்” என்று தீண்ட அஞ்சி ஓடுவர். மார்க்கண்டேயர் வரலாறு இதற்குத் தக்க சான்று.

ஊர் நாய் ஊர் சுற்றித் திரிதலின் காரணமாக நிலையான உணர்வும், நினைப்பும், வாழ்க்கையும் அதற்கு இருக்காது. அதுபோல, இறைவனின் திருவடிச் சிந்தனையில் நிலையான நினைப்பில்லாதவர்கள் உலகியலில் நினைப்பு மாறி, நிலை மாறி சுற்றித் திரிகுவர்.

ஊர் நாய்க்கு முறையாகச் சோறிடுவோர் இல்லாமையின் காரணத்தாலும், சில பொழுது உண்டும் பல பொழுது உண்ணாமலும் வாழ்வதாலும் இளைத்துக் கிடக்கும் குளிப்பாட்டிச் சீராட்டுவார் இல்லாத காரணத்தாலும் கண்ட கண்ட இடத்தில் படுத்துப் புரள்வதின் காரணத்தாலும் வங்கு பிடித்துக் கிடக்கும். அது போலவே, இறைவனின் திருவருள் நினைவு இல்லார் அந்நினைவு இன்மையின் காரணத்தால் உணர்வால் இளைத்து ஒழுக்கத்தால் இளைத்துக் கயமை நிலையடைவர்.

வங்கு பிடித்த ஊர் நாய் அரிப்பு மிகுதியால் தன்னைத் தானே கடித்துக்கொள்ளும். அதுபோல, திருவருட் சிந்தனையற்ற மனிதன் பேராசைகளால் அரிக்கப்பெற்று அவ்வழிப்பட்ட குற்றங்கள் பல செய்து அதற்குரிய துன்பங்களைத் தானே பெற்று அநுபவிப்பான்.

நாய் இழிவான பிறப்பு. எனினும் நன்றி காட்டும் பண்பு அதனிடத்தில் சிறப்பாக உண்டு. நன்றி காட்டும் இந்தச் சிறப்பியல்பும்கூட ஒரு தலைவனிடத்தில் வளர்ந்தாலன்றோ விளங்க முடியும்? ஊர் நாயாக இருப்பதால் நன்றி காட்ட வேண்டிய அவசியமில்லாமற் போகிறது. மனிதனும், அந்த ஊர் நாய்போல் வாழ முடிவதில்லை. எந்த மட்டத்திலும்