பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயல்பாக இல்லாத ஒன்றை வளர்ப்பின் மூலம் பெற்று விடுகிறது. ஊர் நாய் இந்த வாய்ப்பை இழந்து வருகிறது. அதுபோலவே மனிதனும் தக்கவர்களைச் சார்ந்து வளர்வதன் மூலம் தன்னிடத்தில் இயல்பில் இல்லாத அறிவு, ஆற்றல் போன்ற பண்புகளைப் பெற்றுச் சிறக்க முடியும். தக்கோரைச் சார்ந்து வாழாதவன் அத்தகு அறிவு ஆற்றல் பண்புகளைப் பெறமாட்டான்.

வளர்ப்பு நாய்க்குத் தன்னுடைய வளர்ப்புத் தலைவனுக்கு நன்றி காட்டவேண்டும்-அவனையும் அவனுடைய உடைமையையும் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வு இருக்கும். ஊர் நாய்க்கோ ஒருவர் ஏது? அதுதான் வீதிமுழுதும் சுற்றுமே ஆதலால் கடமையுணர்வு அரும்பித் தோன்ற வழியில்லை. அதுபோல, கடவுள் நினைவும், உறுதியான மனித இயல்பும் உடையோர் ஒரு தலைவனை-நண்பனை நாடி வாழ்வர். அவனுக்குரிய கடமைகளைச் செய்வர். அங்ஙனம் அல்லாதவர்கள் ஒரு எச்சில் இலையை முடித்து, அடுத்த எச்சில் இலைக்கும் ஓடும் ஊர் நாய் போல் அடிக்கடி ஆளை மாற்றுவார்கள். ஆதலால் அவர்களுக்குக் கடமையுமில்லை; உரிமையுமில்லை. எனவே, திருவருட் சிந்தனையோடு நல்லியல்புகள் பெற்று வாழ்க்கை வாழ்தலே சிறப்புமிக்கது. இதனை மாணிக்கவாசகர் கூறுகிறார், பாருங்கள்:

உடையா னேநி ன்றனையுள்கி
உள்ள முருக்கும் பெருங்காதல்
உடையா ருடையாய் நின்பாதம்
சேரக் கண்டிங்(கு) ஊர்நாயின்
கடையா னேனெஞ் (சு) உருகாதேன்
கல்லா மனத்தேன் கசியா தேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங் (கு)
இருப்ப தாகவடித்தா யே!