பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

249


ஆட்படுத்திக் கொள்கின்றான். வினைகளும் வினைகளால் வரும் துன்பங்களும் உயிர்களின் சொந்தச் செயலே தவிர, இன்னொருவர் தந்தவையல்ல. நமக்குரிய ஒன்றை ஊழியர் கொண்டுவந்து தருவதுபோல, நம்முடைய சொந்த பலா பலன்களைக் காலத்தால் தோன்றும் நியதித் தத்துவங்களும் தலைவர் வழி நம்மிடம் கொணர்ந்து சேர்க்கின்றன. கொணர்பவர்மீது காய்தலும் உவத்தலும் தேவையில்லை. அவர்கள் அஞ்சற்காரர்போல அலுவல்களைச் செய்பவர்கள் - நாமே நம்முடைய நிலைமையையுணர்ந்து சிந்தையால் சிவனை நினைந்து உரிய தொண்டுகளைச் செய்து உயர்வும், உய்தியும் பெற முயற்சிக்கவேண்டும். பாடலைப் பாருங்கள்:

“இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெய்வமே
வருக வென்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே”

எள்ளும் எண்ணெயும்

திருவாதவூரடிகள் சிறந்த உலகியல் அனுபவம் உடையவர்; அந்த உலகியல் அனுபவம் அருளியலை நோக்கி, வளர்ந்தமையால் பயனுடையதாக அமைந்தது! அனுபவ முதிர்ச்சியினின்று பாடுவதால் கருத்துக்களை இனிதாக - எளிதாக விளக்குகிற உவமைகள் திருவாசகத்தில் மலிந்து காணப்பெறுகின்றன.

வழிபடும் தெய்வத்திற்கு இறைவன் என்ற அருமையான பொருள் பொதிந்த தத்துவப் பெயரை அனுபூதிமான்கள் சூட்டினார்கள். தென்னாடுடைய சிவனே என்று அகங்குளிர வாழ்த்தும் மணிவாசகர், “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று ஏற்றிப் போற்றுகிறார். எந்நாட்டவர்க்கும் என்னும் சொல், நாடு, மொழி, இனம், சமய வேறுபாடுகளைக் கடந்த பொருளைக் காட்ட எடுத்தாண்ட

கு.இ.VIII.17.