பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
திருவாசகத்தில் சமுதாய நோக்கு

மாணிக்கவாசகர் ஞானக்கதிரவனாய் நாட்டில் நடமாடியவர். சேற்றில் கிடக்கும் செந்தாமரை போல மானிட குலத்தில் பிறந்து நடமாடியவர். சேற்றின் குணம் செந்தாமரையில் இல்லை. சேற்றின் மணம் செந்தாமரையில் இல்லை. செந்தாமரையின் குணமும் மணமும் சேற்றிலும் இல்லை. ஆனால் சேற்றிற்கும் செந்தாமரைக்கும் இடையிலுள்ள உறவை யார்தான் மறக்கமுடியும், ஏன், சேற்றின் மணத்தைத்தானே செந்தாமரை ஏற்று நறுமணமாக மாற்றி வையகத்திற்கு வழங்குகிறது! சேற்றுக்கும் செந்தாமரையால் பெருமை உண்டு. செந்தாமரையின் தோற்றத்தால்-வளர்ச்சியால் சேறு தன்னிலை தாழாமல் வாழ்கிறது. சேற்றினின்றும் விலகினால்தான் செந்தாமரை என்பது இல்லை. சேற்றிற்குள் கால் பாவி நின்றாலும் செந்தாமரை செந்தாமரைதான்! மானிட குலத்தில் பிறந்து நாட்டின் அமைச்சராகி, ஞானாசிரியராக விளங்கிய மாணிக்கவாசகர் மானிட குலத்தின் உணர்வுகளில் கால் பாவி நின்றார். அவற்றை அவர் புறக்கணிக்கவில்லை. அவர் குறைகளைக் கடந்தவராக விளங்கினாலும் மானிட குலத்தின் குறைகளை நினைந்து மாற்றத்திற்காகப் பாடுகிறார்; இடித்துரைத்து வழி நடத்துகிறார்.