பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத்தில் சமுதாய நோக்கு

253



மனித சமுதாயம் தொன்மைக் காலத்தில் தோன்றிய நாட்டிற்கேற்ப மொழியால், வாழ்க்கை முறையால் மாறுபட்டிருந்திருக்கும். ஆனாலும் மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு எதிரான வேற்றுமைகள் - முரண்பாடுகள் இடம் பெறவில்லை. அதன் காரணமாக மனித சமுதாயத்தின் இடையே பகை இல்லை; துன்பமில்லை. இன்ப அமைதி தழுவிய வாழ்க்கை நிலவியது. வரலாற்றுப் போக்கில் தன்னயப்பு மிகுந்ததாலும் வலியோர் மெலியோரை வஞ்சித்து வாழத் தலைப்பட்டதாலும் சமயம், வாழ்க்கையாக இல்லாமல் நிறுவனங்களாக மாறிவிட்டதாலும், அரசு வாழ்வோரையே சார்ந்து இயங்கியதனாலும் இயற்கையில் அமைந்த மனித சமுதாய மாறுபாடுகள் நியதிகளாக்கப்பட்டன; நெறி முறைகளாக்கப்பட்டன. காலப்போக்கில் இந்த நியதிகள் - நெறிமுறைகள் பிறப்பின் வழியது என்றும் வலியுறுத்தப்பட்டன. இந்த தவறான- நெறியல்லா நெறிமுறைகளால் கற்பிக்கப்பட்டவையே சாதிமுறைகள்.

மனித குலத்தில் சாதிப்பிரிவினைகள் எல்லா வகையாலும் நியாயமில்லாதவை. இச்சாதிப் பிரிவினையால் மனிதகுல வரலாற்றில் விளைந்தது தீமையே! அழுக்காறு, அவா, வெகுளி என்று வள்ளுவம் வரிசைப் படுத்தும் தீமைகள். சாதிப் பிரிவினைகளும், அவ்வழி பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும் தோன்றிய பிறகு தோன்றிய தீமைகளேயாம். இத்தீமைகளின் காரணமாக மனிதகுலம் இணைந்து வாழ்வதற்குப் பதிலாகத் தம்முள் முரணிப் போராடித் தம் ஆற்றலை இழந்து வந்திருக்கிறது; வையகத்தின் வளத்தையும் அழித்திருக்கிறது. குலவேறுபாடுகளும் இயற்கையல்ல. ஒழுக்கத்தின் பாற்பட்டனவே. ஒழுக்கம் வழி வழியாக வரக்கூடியது. ஆனாலும் வழிதப்பக் கூடாதென்பது நியதியல்ல. அதனால் குலமும் கூட நல்லவர், கெட்டவர் என்று பகுத்துக் காணப் பயன்படுமேயன்றி, மனித குலத்தை வேறுபடுத்திப் பிரிப்பதற்குப் பயன்படக் கூடாது. மனிதன்