பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருக்காது. இறைவன் மட்டுமே தனித்து நிற்பான், அப்போது ஒரு தனிமை இருக்கும். அந்தத் தனிமைத் துன்பத்தை மறப்பதற்காகப் படித்துக் கொண்டிருக்கவே திருவாசகத்தைப் பிரதி எடுத்துக் கொண்டான் என்று மனோன்மணியம் கூறும்.

“கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதியதே”

என்பது மனோன்மணியம்.

திருவாசகம் ஞானப் பனுவல்; பிறவிப் பிணி நீக்கும் அரிய பனுவல்; அல்லல் தீர்க்கும் அருமருந்து; ஆனந்தத்தை வழங்கும் இன்பத் தமிழமுது; அருளமுது; இன்ப அன்பினை அளிக்கும் அருளமுது. இத்தகு திருவாசகத்தின் பாடல்களை “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து” சொல்ல வேண்டும் என்று மாணிக்கவாசகர் கூறுகிறார்.

“பாட்டின் பொருள் உணர்ந்து” என்றால் என்ன? எழுத்து, சொல், பொருள் என்று “ரிகார்டு” அடிப்படையில் தெரிதலா? இல்லை. இங்ஙனம் எழுத்தும் சொல்லும் பொருளும் மட்டுமே நாடியதால் நம்மனோர் வாழ்க்கையில் இன்று, வாழ்க்கையின் மிகப் பெரிய பேறாகிய ஞானத்தைக் காணோம்! பக்தி இருக்கிறது! பூசனைகள் நடைபெறுகின்றன. ஆயினும், இவற்றின் பயனாகிய ஞானத்தைக் காணோம்! “ஞானத்தால் அன்றி வீடு பேறு இல்லை” என்பது மெய்கண்ட சிவம் தேறித் தெளிந்த உண்மை. பாட்டின் பொருளாவது சிவமேயாம்! மாணிக்கவாசகர் அருளிச் செய்துள்ள திருவாசகத்திற்குப் பொருள் யாதென உணர்த்துமாறு தில்லை வாழ்மக்கள் அவரைக் கேட்ட பொழுது, பொன்னம்பலத்தில் ஆடும் ஆடல் வல்லானே பொருள் எனக் காட்டினார் என்பது திருவாதவூரடிகள் புராணம்.