பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/288

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று கூறுவது தமிழ் வழக்கல்ல, பிற புல வழக்கு, கிறித்தவ நெறியில்... முன்னால் பாபமன்னிப்புமுறை இருந்து வந்தது. அதாவது, போப், பாபம் செய்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்து பாபத்தை மாற்றிவந்தார்.

காலப்போக்கில் போப் பாப மன்னிப்புச் சீட்டு விற்கத் தொடங்கினார். உடன், மார்டின் லூதர் பாப மன்னிப்புச் சீட்டு முறையை எதிர்த்தார். இந்த வரலாறு இந்த நாட்டில் எல்லாருக்கும் தெரியும். சில சடங்குகளைச் செய்வதின் மூலமும் பாபத்தைக் கழித்துவிடலாம் என்பது வடமொழி வழக்கு. ஆனால் சைவத்தமிழ் வழக்கு முற்றிலும் மாறுபட்டது. அதுமட்டுமின்றி அறிவிற்கும் -- அனுபவத்திற்கும் ஏற்றது சைவத் தமிழ் வழக்கேயாகும்.

மாணிக்கவாசகர் அழுதவர்; அழச்சொன்னவர் அவர் தம் பாடல் மூலம் நம்மையெல்லாம் அழவைப்பவர். “மனம் கரைந்து மலம் கெடுக்கும் வாசகம்” என்று மனோன்மணீயம் கூறுகிறது. நாம் செய்தவற்றை நாமே நினைந்து-வருந்தி அழுவதின் மூலம் மன்னிப்புப் பெற முடியும். அங்ஙனம் அழுவதினால் நெஞ்சு பக்குவப்படுகிறது. அதனால் மீண்டும் தவறு செய்யும் பண்பு கால் கொள்வதில்லை, இதனை,

“யானே பொய்யென் நெஞ்சும்
பொய்யென் அன்பும் பொய்
ஆனால் வினையோன் அழுதால்
உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே யருளாய் அடியேன்
உன்னைவந் துறுமா றே”

என்ற திருவாசகத்தின் மூலம் உணரமுடிகிறது.