பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
மாணிக்கவாசகர்

தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டுப் பறம்பு நாட்டில் உள்ள திருவாதவூரில் அவதரித்தவர், திருவாதவூரர். திருவாதவூர் ஒரு சிற்றூர். ஆயினும் செந்தமிழ் நலங்கொழித்த சிறப்பான ஊர். புலனழுக்கு அற்ற அந்தணாளர் கபிலர் பிறந்தது திருவாதவூரே என்று கூறுவர்.

பைந்தமிழ் மண்டலமாகத் திகழ்ந்த பறம்பு நாட்டில் வள்ளல் பாரியின் அவைக்களப் புலவராக விளங்கியவர் கபிலர். திருவாதவூரில் அவதரித்த திருவாதவூரர் முறையாகக் கல்வி பயின்றும் தனித் திறன்கள் பல பெற்றும் விளங்கினார்.

இந்தச் செய்தி, பாண்டிய அரசன் அரிமர்த்தன பாண்டியனுக்குத் தெரியவந்தது. அன்றைய அரசு முறைப்படி - பெரியோரை துணையாய்த் தேடியும் அமைத்துக் கொள்ளல் என்ற முறைப்படி - திருவாதவூரரை முதலமைச்சராக்கிக் கொண்டான் அரிமர்த்தன பாண்டியன்.

ஞானவேட்கை கொண்ட மாணிக்கவாசகர்

திருவாதவூரர் பாண்டிய நாட்டரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சிறப்புற, நாட்டு மக்கள் நலமுடன் வாழும் வகையில், ஆட்சி செய்து வந்தார். ஆயினும்