பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/301

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தகைசால் தலைமை

289


தனக்குவமை இல்லாதவன். “சாதலும் பிறத்தலும் இல்லாதவன். பிறவாயாக்கைப் பெரியோன்” என்று சிலப்பதிகாரம் வாழ்த்துகிறது. அவனே வேள்வியை-வேள்விவழி அளிக்கப்படும் பொருளைப் பெறுதற்குரிய தலைவன். எனினும் அவன் அழைக்கப் பெறவில்லை. சிவபெருமான் இருக்கவேண்டிய இடத்தில் வேள்வித் தலைமையிடத்தில் திருமால் முதலிய அமரர்கள் அமர்ந்தார்கள். தலைமையின் மீது உயர்ந்த ஆசையால் வேள்வியை-வேள்விப் பொருளை ஏற்றுக் கொண்டார்கள்.

பின்னர் பாற்கடல் கடைந்த காலத்து நஞ்சு எழுந்தது. நஞ்சை அடக்கும் ஆற்றல் திருமால் முதலிய அமரர்களுக்கு இல்லை. அவர்களுடைய தலைமை நஞ்சை அடக்கி அமரர்களைக் காப்பாற்றப் பயன்படவில்லை. அவர்களால் முடியாமல் போய்விட்டது. ஏன்? அவர்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல், தவித்தார்கள். பெருமையை விரும்பிய தகுதியில்லாத போலித் தலைமையாளர்கள் நஞ்சைக்கண்டு அஞ்சினார்கள், அலறினார்கள். எல்லா உயிர்க்கும் அம்மையப்பராக இருந்தருளும் சிவபெருமானை நோக்கிக் கதறினார்கள், காப்பாற்றுக என்று அடைக்கலம் புகுந்தார்கள். சிவபெருமான் புன்முறுவல் பூத்தான். சிறுமை பொறுத்து அருள் வழங்கினான். நஞ்சை உண்டு-கண்டத்தில் அடக்கித் திருமால் முதலிய அமரர்களுக்கு வாழ்வளித்தான். “விண்ணோர்கள் அமுதுண்டும் சாக ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்வான் என்று இளங்கோவடிகள் சிவபெருமான் தகைமைசால் தலைமையை வாழ்த்துகிறார். “நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே” என்று புறநானூறு போற்றுகின்றது. சிவபெருமானே தனக்குவமை இல்லாத தலைவன்-கடவுள். மற்றையோர் கடவுளரல்லர். புண்ணியத்தின் விளைவாகப் பதவி பெற்ற உயிர்களேயாம். திருமாலையும் நான்முகனையும் சிவனோடு சேர்த்து மூவர் என்று சொல்வது அறமல்ல. இங்ஙனம்