பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/303

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15


நியாயமே!


தேசம் உய்யத் திருவாசகம் தந்த மாணிக்கவாசகப் பெருமானின் வரலாறு கருத்திற்கினிய விருந்தாகும். வரலாற்றுப் போக்கில் ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்புண்டு. இது சரியா? அது சரியா? என்று பல கேள்விகளை மாணிக்கவாசகர் வரலாற்றில் எழுப்ப முடியும். ஆம், வெறும் அறிவு விவாதத்திற்குட்பட்டது-நடைமுறைக் கொவ்வாதது. அனுபவத்திற்கல்லாதது. வெற்று அறிவுணர்ச்சியோடு மாணிக்கவாசகர் வரலாற்றைப் படித்தால் குழப்பமே மிஞ்சும். ஆழ்ந்த அறிவோடும், நடைமுறையோடும், அனுபவத்தையும் சாத்தியக் கூறுகளையும் கூட்டி மாணிக்கவாசகர் வரலாற்றைப் படித்தால் அவ் வரலாறு வாழ்க்கைக்குப் பெரு விருந்தாக இருப்பதை உணரலாம். இந்த முறையில் மாணிக்கவாசகரின் வரலாற்றை ஆராய்வோமாக.

பாண்டிய மன்னனிடத்தில் மாணிக்கவாசகர் அமைச்சராக இருக்கின்றார். அறிவிலும், ஆட்சிமுறையிலும், குடிமக்களுக்கு நல்லன செய்வதிலும் சிறந்து விளங்குகின்றது மாணிக்கவாசகரது அமைச்சியல். குடிமக்களிடத்திலிருந்து அரசன் வரி வாங்குகின்றான். அங்ஙனம் மக்களிடம் வரி வாங்குவது அரசனுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக அல்ல;