பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/307

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நியாயமே!

295


தவித்தது. ஆம், அந்தக் குடியில் பெண்ணொருத்தியே வாழ்ந்தாள். அவளும் முதியவள். வேலை செய்யும் சக்தியற்றவள். அரசன் ஆணைவழி ஆளனுப்ப இயலவில்லையே என்று ஏங்குகின்றாள். அற்றவருக்கருந் துணையாக விளங்கும் ஆண்டவனை நோக்கி வேண்டுகின்றாள். விதி வழியே “கூலியோ கூலி” என்ற குரல் கேட்கின்றது. ஆம், ‘தேவர்க் கோவறியாத தேவதேவன்’ தெருவழியில் நடந்து வருகின்றான்; தட்டும் மண்வெட்டியும் தாங்கி, “கூலியோ கூலி” என்று கூவி நடந்து வருகின்றான். குரல் கேட்ட கிழவி-வந்து ஆறுதல் பெற்றாள்; அமைதி கொண்டாள். வந்திக்கு ஆளாக அமைகின்றாள். கூலி பொன்னல்ல, பொருளல்ல; வயிற்றுப் பசிதீர்க்கும் பிட்டேயாகும். பிட்டைத் தின்றுவிட்டு வெள்ளம் தடுக்கும் வேலையில் ஈடுபடச் சென்ற கூலியாள் அங்குத் தனது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. தான் செய்யாததோடு மாத்திரமின்றி செய்பவரையும் கெடுக்கின்றான். இதனால் வந்தியின் பகுதி அடைபடாமலே கிடக்கின்றது. மாலையில் அரசன் வெள்ளத் தடுப்பு வேலையைப் பார்வையிட வருகின்றான். அடைபடாத பகுதியைப் பார்க்கின்றான். அதற்குரிய வந்தியின் ஆளை வெகுண்டு அடிக்கின்றான். அடித்ததென்னவோ எதிரிலிருந்த ஆளை, ஆனால் அடிபட்டது வையத்துயிர்க்கெல்லாம்; அடித்தவன் உட்பட கொற்றாள் மறைந்தனன்! இந்நிகழ்ச்சிகளின் தொகுப்பிலே பெறப்படும் நற்கருத்துக்கள் எவை, எவை? ஏன் இறைவன் கொற்றாளாக வந்தனன்? அவன் நினைத்த மாத்திரையில் எல்லாவற்றையும் செய்யக் கூடியவனாயிற்றே? அப்படியிருக்க அவனே கொற்றாளாக வந்தது திருத்தொண்டின் நெறியை உலகுக்கு உணர்த்தவேயாகும். சமுதாயத் திருத்தொண்டுகளைச் செய்வதில் எல்லோரும் ஈடுபட வேண்டுமென்ற படிப்பினையைக் காட்டுவதற்காகவே இறைவனே கொற்றாளாக வந்தனன்! அப்படி வந்தபோதும் பொன்னுக்கும் பொருளுக்கும் மண் சுமக்காமல்