பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/312

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாணிக்கவாசகர். “சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே!” என்கிறார். சோதி-அகண்ட ஒளி, புவிக்கோளத்தை விளக்கிக் காட்டுவது சுடர்! மனைகளை, வீடுகளை விளக்கிக் காட்டுவது ஒளிவிளக்கு! ஆன்மாவை விளக்கம் செய்து, ஆன்ம தரிசனமும் அவ்வழி கடவுள் தரிசனமும் தந்தருளும் பாங்குடையது. ஆதலால் கடவுட் காட்சியில் தூரத்துக் காட்சி வண்ணக் காட்சிதான்! ஓங்கி உயர்ந்த சோதி! இந்தத் தத்துவங்களை விளக்குவது தான் மலைமேல் விளக்கு! அண்ணாமலை தீபம்!

மலை, நெடுந்தொலைவில் உள்ளது; உயரமானது. ஆங்கு ஒரு சோதி அழைக்கிறது; வழிகாட்டுகிறது. தமிழ் நாட்டில் கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தன்று ‘சொக்கப்பனை’ கொளுத்தும் பழக்கம் உண்டு. இன்றும் நடந்து வருகிறது. இதுவும் இறைவன் ஓங்கி உயர்ந்த சோதியாக விளங்குகின்றான். (அறிவாலும் பொருளாலும் தேடி காண முடியாதது அன்பின் வயப்படும் பொருள் அது) காட்சியளிக்கின்றான் என்ற தத்துவமேயாகும்! அடுத்து, அண்மித்து வரும்பொழுது கடவுட் காட்சியில் உருவம் தெரிகிறது! ஆம்! குனித்த புருவம் உடையவன்; கோவைப் பழம் ஒத்த செவ்வாயினன்; அவன் உதடுகளில் புன்சிரிப்பு; விரித்த சடையினன்; நனைந்த சடையன்; திருவெண்ணீற்றில் துதைந்த திருமேனி உடையவன். ஒற்றைக்கால் தூக்கி ஆடுகின்றான்! அவன் உருவில் பாதி பெண். இவையெல்லாம் உருவக்காட்சி; இந்த நிலைகளையும் கடந்து இறைவன் அண்ணித்து நெருங்கி நிற்கும்பொழுது புலப்படுவது உறுப்புக்காட்சி! அதாவது திருவடிக் காட்சி! இறைவனை அண்மித்து நிற்கும் பொழுது புலப்படுபவை திருவடிகள்; திருவடிகளைப் பற்றிய நாயன்மார்களும் ஆழ்வார்களும் அனுபவித்து அனுபவித்துப் பாடுவார்கள்; திருக்குறளும் கடவுள் வாழ்த்தில் திருவடிகளையே பேசியிருப்பது