பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/321

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

309


சிவனைப் புகழ்ந்து பாடுதல், ஐந்தெழுத்து எண்ணுதல், சிவபூசை செய்தல், சிவ புண்ணியங்களைச் செய்தல், சிவபுராணங்களைக் கேட்டல், திருக்கோயில் வழிபாடு செய்தல், திருவருள் நெறி நிற்பாரிடமே உண்ணுதல், சிவனடியார் உவப்பன கொடுத்தல் ஆகியன. அகத்திலக் கணமாவது; இறைவனது பொருள்சேர் புகழைக் கேட்கும் பொழுது மெய்ப்பாடுறுதல்! அவை மிடறு விம்மல், நாத்தழு தழுத்தல், இதழ்துடித்தல், உடல் குலுங்கல், மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், சொல்லெழாமை, கண்ணீர் அரும்புதல், வாய்விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகியன. சித்தத்தில் தூய்மையுடையவர் இறைவனைப் பாடுவர். சித்தத்திற்கு அழகு. திருவருட் சிந்தனையாம். பழைய அடியார், புத்தடியாரைக் குற்றம் நீக்கிச் சிவமாக்கும் அருளிப் பாட்டினை இயல்பாகவுடையவர். இங்ஙனம், சித்தம் அழகியார் இறைவனைப்பாடும் பெற்றியை நினைந்து நாமும் பாடுவோமாக! திருவருளை நினைந்திடுவோம்; சித்தத்தில் அழகினைப் பெற்றிடுவோம்; மாந்தர் குலத்தின் சிந்தனையில் அழகு தோன்றின் சகமெலாம் அழகு பொலியும்.

ஒண்ணித் திலநகையா யின்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ?
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோ மவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறைவில் துயிலேலோ ரெம்பாவாய்.

4

மார்கழித் திங்களின் குளிர், உறக்கத்திற்குத் துணை செய்கிறது. பொழுது புலர்கிறது! பொழுது புலர்தல் எழுச்சிக்குத் துணை. உறக்கமா? எழுச்சியா? என்ற வினாவிற்கு விடை காண்பதிலேயே உயிருலகம் வளர்கிறது; வாழ்கிறது.