பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மார்கழிநோன்பை எடுக்கும் வகைபற்றிப் பேசிக்கொண்டிருந்தபொழுது, நானே நாளை வந்து உங்களை எழுப்புகின்றேன்” என்று சொன்னாள். ஆனால், இப்பொழுதோ உறங்கிக் கொண்டிருக்கிறாள்! உறக்கத்தில் அவள் உயிருணர்வு சென்ற திசை தெரியவில்லை! சொன்ன சொற்படி நடக்க இயலவில்லையே என்ற நாணத்தை இழந்து உறங்குகின்றாள். ஆதனால், எழுப்புகிறவர்கள் “இன்னும் பொழுது புலரவில்லையோ?” என்று எள்ளிக் கேட்கின்றனர். எழுப்புகிறவர்கள் மேலும் இரக்க உணர்ச்சியோடு, “உனக்காக நீ, பாட எழுந்து முன் வராது போனாலும் நாங்கள் வந்து எழுப்புகிறோமே! எங்களுக்காகவாவது எழுந்து பாடவா!” என்பது உலகியல். அறியாமையினால் அடம் செய்யும் குழந்தையைத் தாய், தன்மீது ஆனைகாட்டித் தனக்காகவாவது சிறப்புடைச் செயல்களைச் செய் என்று வழி நடத்தும் உலகியல் வழக்கு அறியத்தக்கது. பொதுவாக, உலகியல் அவரவர்க்கென்று உணர்ந்து நலம் நாடுதல் - செய்தல் எளிதன்று. பெருவழக்குமில்லை. தொடர்புடையார் நலங்கருதிச் செய்தல் மூலமே, நலம்பெறுதல் இயல்பு. தாயின் நலங்கருதிச் சேயும், சேயின் நலங்கருதித் தாயும், கணவன் நலங்கருதி மனைவியும், மனைவியின் நலங்கருதிக் கணவனும் ஒழுகும்பொழுது, ஒழுக்கநிலை எய்துகின்றனர்; நலம்பல எய்துகின்றனர். பிறர்நலம் பேணும் பெட்பில் இடரின் இயல்பாய் வளர்கின்றனர். “எங்களுக்காகவாவது பாடு!” என்பதில் உள்ள அருமை அறிக.

உறங்குபவள், இறைவன் திருப்புகழைக் கேட்டும் அவன் தன் தண்ணருளைப் பாடக்கேட்டும் ஊனுருகாமல் உள்ளம் உருகாமல், ஒரு வார்த்தையும் பேசாமல் உறங்கும் நிலையை எண்ணி வருந்துகின்றனர்; ஒப்புரவுப் பண்பிற்குக் கூட அவள் ஏழாதிருப்பதை எண்ணி வேதனைப்படுகின்றனர். அதுதான் போகட்டும்! இறைவன் புகழைப் பாடுகிறவர்களை ஊர் மெச்சுகிறது; உலகம் மெச்சுகிறது.