பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/328

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொழுதே உருகி நிற்பாய். ஆனால் இப்போது நீயோ, நாங்கள் அனைவரும் இறைவனைப் பற்றிப் பேசியும் நீ யாதும் அறியாதவள் போல் உறக்கத்தில் கிடக்கின்றாயே! இஃதென்ன உறக்கம்! என்று எழுப்புபவர்கள் கேட்கின்றனர். இத்திருப்பாடல் ஞானம் தலைப்பட்ட உயிர், பழக்க வாசனையால் பாதிக்கப்பட்ட நிலையை எடுத்துக் காட்டுகிறது. பெருங்காயம் இருந்த பாண்டத்தில் பெருங்காயத்தினை எடுத்த பிறகும் பெருங்காயத்தின் மணமிருக்கும். அந்த மணத்தினையும் எடுத்து விழுங்கும் ஆற்றலுடைய பொருள், அப்பாண்டத்தில் இடப்பெறாது போனால், பெருங்காயத்தின் மணமேவிஞ்சும். அதுபோல, ஆணவத்தின் ஆற்றல் அடங்கிற்றாயினும் அதன் வீச்சு முழுமையாக அகன்று விடுவதில்லை. பழக்கத்தின் வாசனையால் அது தலை காட்டும். பழக்கம் தவிரப் பணித்தல் நமது கடன். ஆணவத்தினின்றும் விலகித் திருவருள் தலைப்பட்ட உயிர், திருச்சின்னத்தின் ஒலி கேட்டபொழுதும் “சிவ, சிவ!” என்றது, சிவனறிவு நெறிப்பட்டது; அருள் தழீஇ நின்றது. அதனால், ஊனுருகி, உளமுருகி, உயிருருகி மெய்யுணர்வு வழிப்பட்டு நின்றது. ஆனால், இந்த இன்னுயிரைப் பழைய வாசனை ஆணவத்தின் முடை நாற்றம்-அறியாமையின் இருள் வீச்சு சூழ்ந்து கவ்விக் கொண்டது. அதனால், “பாடியும் கேட்கிலை; பேசியும் கேட்கிலை! சின்னங்களின் ஒலி கேட்டதுமே அழுதவளாகிய நீ, இன்றோ இறைவனின் திருநாமத்தை, அருளிப்பாடுகளை விரித்துப் பேசுவதைக் கேட்டும் எழுந்திருக்கவில்லையே!” என்று ஆற்றாமை மேலிடக் கூறுகின்றனர்.

இறைவனோ, அமரர்களுக்கு அறிய முடியாதவள் ஏன்? அமரர்களுக்கு ஞானம் ஏது? அவர்கள் தங்கள் அகக் கருவிகளாலேயே ஆண்டவனைத் தேடுபவர்கள் அவ்வகக் கருவிகளும் கூட இன்ப விழைவிலும், அதிகார விருப்பிலும் தம்முள் மயங்கியவை. அதனால், அமரர்கள் ஞானம்