பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெண்கள்” பெயரில் சிலருண்டு. எண்ணெய் வற்றிய உடல் தாங்கி, அறியாமையின் மறுபதிப்பாகச் சிலர் பணி செய்கின்றனர். அவர்களைப் “பணிப் பெண்கள்” என்பது சொல் வழக்கே யாம். மாணிக்கவாசகரே கோயிற் பணிப் பெண்களுடன் ஞான வினா-விடை நிகழ்த்தினார் என்றால், அவர்களின் மாட்சிமை என்னே!

மாணிக்கவாசகர் இத்திருப்பாடலில் இறைவனின் நிலையை இனிது விளக்குகின்றார். சொற்களின் எல்லையைக் கடந்தது அவனுடைய திருவடிகள்! பொருள்களின் முடிபாக உள்ளது அவன் திருமுடி! அவன் மங்கை பாகன்! அவன், புகழ்ச்சியைக் கடந்த போகம்! ஆயினும் அவன் தோழன்; தொண்டர்கள் உள்ளத்தில் விருப்புடன் தங்கி அருள்பவன். அவன் ஊர் எது? அவன் பெயரென்ன? அவனுக்கு உறவினர் உண்டா? உண்டெனில் உறவினர் யார்? உறவினர் உண்டெனில் அயலாருண்டோ? அயலார் உண்டெனில் அவர் யார்? அவனைப் புகழ்ந்து பாடும் வழி எது? வகை எது? என்று கோயிற் பணிப்பெண்களை வினவுவார் போல விளக்கி அருளுகின்றார்.

பொருள் முடிவு, திருமுடி என்றது பொருள்களின் எல்லை சிவமே என்பதை உணர்த்துவதற்கே! திருவாசகத்தின் பொருள் ஆடல் வல்லான்தானே! சொற்களுலகம் பொருளைப் பொருளின் பொருளைத் தேட துணை செய்வதில்லை. சொற்களைக் கடந்த பொருளைத் தேடுவோம்; காண்போம்.

உருவ வழிபாட்டின் இன்றியமையாமையை இப்பாடல் உணர்த்துகிறது. ஒலி, வரி வடிவம் பெற்றாலன்றி முழுதின்பம் தராது. அதுபோல் அருவநிலையினனாகிய ஆண்டவன் அருவுருவ நிலையை உருவ நிலையை உயிர்களுக்காகக் கொண்டு ஆண்டு கொண்டருளும் திறன் பாராட்டப்படுகிறது. இங்கு இறைவனின் திருவருள் மாதொரு பாகனாக