பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/340

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறிக்கும். ஓவிய நூல் வல்லார் அருளுக்கு நீலத்தையும் ஆற்றலுக்குச் சிவப்பையும் பயன்டுத்துதல் அறிக.

நீலமலரும், வளையல்களும் அம்மையை உணர்த்திச் செந்தாமரை மலரும், பின்னிக்கிடக்கின்ற பாம்புகளும் சிவபெருமானை உணர்த்தின. உடலழுக்குக் கழுவுவார் சாரும் மடுப்போல, மன அழுக்கு நீக்குவார் நாடும் திருவருளை ஒத்திருப்பதால் பொய்கையின் மடு சிவசக்தி மயமாயிற்று. பொங்கும் மடு, இறைவனைக் காட்டுகிறது. குவளைமலர் இறைவனின் பேரருள் உடைமையையும், செங்கமலப்போது, வரம்பிலின்பம் உடைமையையும், குருகினம் தூய உடம்பினையும், அரவம் முடிவிலா ஆற்றலையும், மலங்கழுவுவார் பாசங்களினின்று இயற்கையில் நீங்கியமையையும் விளக்கிக் காட்டுகின்றன.

உய்திக்குரிய தகுதிப்பாட்டை அடைந்த உயிர்கள் காணும் காட்சியெல்லாம் சிவக்காட்சி! துய்ப்பனவற்றையும் உய்ப்பனவற்றையும் கூட அவை, சிவபோகமாக்கிக் கொள்ளும். இத்தகைய உயிர்களுக்குக் குடங்கள் அடுக்கிக் கூர்ச்சங்கள் அணிந்து, மந்திரங்களை ஓதிச் செய்யும் கிரியா தீட்சைகள் தேவையில்லை. இத்தகைய உயிர்கள், தாம் காணும் காட்சிகளிலிருந்தே ஞானத்தினைப் பெறும், பைங்குவளைக் கார்மலரைப் பார்க்கும் பக்குவ உயிர்கள் அருட்கண்ணால் நோக்கப் பெற்றுப் பாசத்தை ஒழித்திடும் அனுபவத்தைப் பெறுகின்றன. செங்கமலப் பைம்போது, பாவனையால் பாசத்தை ஒழித்துத் திருவருளைப் பதித்தல், அதாவது, ஞானாசிரியன் மாணவனது இதய கமலத்துக்குள் புகுந்து அவனறிவை வாங்கித் தன் இதய கமலத்தில் கலந்ததாகக் கொண்டு, மாணவன் அறிவின் புன்மையை நீக்கித் தனது தண்ணருளைச் சேர்த்து, மாணவனை இதயத்தில் மீண்டும் சேர்த்து நிலைப்படுத்துதலாம். இவ்வளவும் பாவனையில் நிகழுதல் வேண்டும். பாவனையால் இங்ஙனம் நிகழுமா? என்று ஐயுற வேண்டியதில்லை.