பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/342

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவனைப்பாடி ஆடுகின்றனர். இருள்நீக்கி இன்பம் வழங்கும் சோதியின் திறம்பாடி ஆடுகின்றனர். இறைவன் எப்பொருளுக்கும் முதலாக விளங்கும் நிலையைப் பாடி ஆடுகின்றனர். இறைவன் எல்லாப் பொருள்களுக்கும் ஈறாக விளங்குவதை எண்ணிப் பாடுகின்றனர்; உயிர்களின் அறிவை வேறுவேறாக வளர்த்து எடுத்தாளும் அன்னை திருவருட் சக்தியின் திறம்பாடி ஆட அழைக்கின்றனர்.

“வேதப் பொருள்பாடி” என்றதால் ஞானமாகிய அருவ நிலையையும் “சோதி” என்றதால் அருவுருவ நிலையையும் ‘கொன்றைத்தார்’ என்றதால் உருவ நிலையையும் ஓர்ந்து உணர்க! காலங் கடந்த பரமசிவம், அனாதியானது. கால தத்துவத்திற்கிசைந்த ஆதியாகவும் நின்று அருள்பாலிக்கும் அருமைப்பாட்டினை அடிகள் நினைந்துருகிப் பாடுகின்றார். அறிவியல் நியதிப்படி அனாதியாயிருக்கும். ஒன்றே இறுதி நிலையாதல் கூடும்.

இத்திருப் பாடலில் உணர்வைத் தொடும் பகுதி.

“பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி”

என்ற சொற்றொடராகும். பேதித்தலாவது உயிர்களின் அறிவை ஒருகாலுக்கொருகால் வேறாகச் செய்தல், அங்ஙனம் அறிவை வேறுபடுத்துதல் ‘வளர்த்து’ என்று கூறியதால் ஆக்கவழியின்பாற்பட்ட வேறுபாடு என்பது அறியத் தக்கது. “அறிதோறறியாமை” என்ற வள்ளுவர் வாக்கும் அறிக! குற்றங்கண்டவிடத்து அடித்தும், குணங் கண்டவிடத்து அணைத்தெடுத்துப் பாராட்டி வளர்ப்பதும் தாயின் இயல்பு. “புளியம் விளாறினால் மோதுவிப்பாய்பின்னை உகப்பாய்” என்றார் அப்பரடிகள். அன்னை சிவசக்தி உயிர்கள் பக்குவமடைதற்காக, உயிர்களைப் பிணித்து நின்ற மலத்திற்கு அனுகூலமாய் உடன்பட்டு நின்று வினைப்போகங்களில் அழுந்தி அனுபவிக்கச் செய்கிறாள்! உயிர்கள், வினைப்