பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/355

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

343


வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் காவலாக விளங்கும் கழல்களுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவெய்துதற்குக் காரணமாய திருவடிகளுக்கு வணக்கம். அரியும் அயனும் காணாத கமலத் திருவடிகளுக்கு வணக்கம். எங்களை அடிமையாகக் கொண்டு ஆண்டருளி உய்தி கூட்டித் தரும் பொன்மலர்த் திருவடிகளுக்கு வணக்கம். இங்ஙனம் அழகமர் திருவடிகளைப் பலகாலும் வணங்கிப் பூம்புனல் பாய்ந்தாடுவோம்” என்று துதிக்கின்றனர்.

இத்திருப்பாடலில் இறைவன் திருவடிகள் ஐந்தொழில் நிகழ்த்தும் இயல்பு வாழ்த்தப் பெறுகிறது. மார்கழி ஆதிரை நாள், சிவபுண்ணியத்திற்குரிய நன்னாள்! அன்று பெருமானை அருச்சித்தல் சிறப்பு, ‘தோற்றமாம்’ என்றது படைப்பையும் ‘போகமாம்’ என்றது காப்பையும் ‘ஈறாம்’ என்றது அழிப்பையும், ‘காணாத புண்டரிகம்’ என்றது மறைப்பையும், ‘ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்’ என்றது அருளையும் கூறிற்று.

இத்திருப்பாடலில் எட்டுப் போற்றிகள் வந்துள்ளன. ‘போற்றி’ என்ற சொல், தமிழில் அருச்சனைக்குரிய மந்திரச் சொல். எண்வகைப் போற்றிகள் அமைந்துள்ள இப்பாடலை நாள்தோறும் ஓதி மலர் தூவி வழிபட்டால் இறைவனின் எண்குணங்களும் நம்மிடம் வந்து தங்கும். இங்ஙனம் மார்கழி நீராட்டு, திருவருளோடு ஒன்றாகிய இன்பக் கலப்பாய் - அன்பு நீரோட்டமாய் அமைந்தது. நிகழ்வனவெல்லாம் திருவடிகளாகிய திருவருட்சக்தியே என்று காண வைத்ததால் திருவருட்சக்தியை வியந்ததாயிற்று.

இந்நாட்டுப் பாவையர் பாவைநோன்பு மரபுவழி நோற்றிடுக! பாவைப் பாடல்களைப் பாடிப் பூஞ்சுனையில் ஆடிடுக! வான்மழை பொழிக! மலிவளம் சுரக்க! உயிர்கள் தழைத்தினிது வாழ்க! இறைவன் மனக்கோயிலில் எழுந்தருள்க! இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!