பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/357

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

345


எழுந்தருளும்படி வேண்டி, அங்ஙனமே எழுந்தருளப் பெற்றுத் திருவருள் வழிப்பணி நிற்கும் வேட்கையைத் தெரிவிப்பது திருப்பள்ளி யெழுச்சி. பாழறையாகிய மன அறையில் இறைவனை எழுந்தருளச் செய்யும் பாடல்களே திருப்பள்ளி யெழுச்சி. திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன், மனக்கோயிலில் குடிபுகும் நாளே உயிர்கள் வாழத் தொடங்கும் நாள்; இன்பநாள்.

“எம் பெருமானே! பொழுது புலர்ந்தது! நின் திருவடிகளில் மலரைத் தூவித் தொழக் காத்திருக்கின்றோம். பள்ளி யெழுந்தருள்க!”

“அடியேனது வாழ்விற்கு மூலமாகிய பொருளே! தாமரைகள் மலரும் நன்செய் சூழ்ந்த திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!, ஆனேற்றுக் கொடியை உயர்த்தியவனே! என்னை அடிமையாகப் பெற்றவனே! தலைவா! பொழுது புலர்ந்தது! நினது மலரடிகளில் மலர்களைச் சாத்தி எமக்கருளும் திருமுகத்தின் புன்முறுவலை நினைத்து திருவடிகளைத் தொழுவோம்! எழுந்தருள்க!” என்று அழைக்கின்றார்.

உயிர் வாழ்க்கைக்கு உய்தியாகிய ஊதியம் தேட கடவுள் ‘முதல்’ என்பதை உணர்த்த ‘வாழ்முதல்’ என்றார். கடவுள் வாழ்த்துப் பொருள் மட்டுமன்று; வாழ்வுப் பொருளுமாம்! புல்லும் பூண்டும், கல்லும் கட்டியும் இல்லாது உழுத சேற்றில், செந்தாமரை தோன்றி மலரும். முரண்பாடுகளும் மாறுபாடுகளும் இல்லாது அன்பில் உழுத பழுத்த மனத்தடியார்-சிவானுபூதிச் செல்வர் சிந்தையில் பரமசிவம் தோன்றும்.

“போற்றி! என் வாழ் முதலாகிய பொருளே!” “திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!” “ஏற்றுயர் கொடியுடையாய்!” ‘எனையுடையாய்!’ ‘எம்பெருமான்’ என்ற ஐந்து விளிகள், இறைவனின் ஐந்து முகங்களை நினைந்து

கு.இ.VIII.23.