பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/361

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

349



“தேவ தேவனே! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! யாவராலும் அறிதற்கு அரியவனே! எமக்கு எளிமையானவனே! எம்பெருமானே! குயில்கள் கூவின; கோழிகள் கூவின; நாரைகள் ஒலித்தன; சங்குகள் ஒலித்தன; விண்மீன்கள் ஒளிகுன்றன, உதய காலத்து ஒளி எழுந்தது! தேவரீர்! திருப்பள்ளியெழுந்தருள்க! எமக்குத் திருவடி யிரண்டினையும் காட்டத் திருவுள்ளம் கொள்க!

அக இருள் நீக்கி ஞானம் தலைப்படுதல் திருவடிக் காட்சிக்கு உரிய காலம். பின்னே கூவும் குயில் முன்னே கூறப்பட்டது ஏன்? குயில் மிகவும் கருமையானது. ஆயினும் இனிய குரலுடையது. அதுபோல ஆண்வமலம் கருமையானது, அதாவது துன்பமானது. ஆனால் ஆணவமல அனுபவத்தின் விளைவு, பயன், முடிவு-இன்பம்; அதோடு குயில் கூவின காலம் இருள் விலகும் நிலை எய்தியது என்பதாம். கோழி, மிகுந்த செம்மையும் சிறிது கருமையும் கலந்தது. இது மறைக்கும் இருளும், அருளும் சக்தியும் கலந்ததன் சின்னம்! அதன் அடையாளம் கோழி! கோழி கூவுதல் அறியாமை அருகி, அருள்மேம்பட்டு விளங்கும் நிலையை உணர்த்தும். குருகு, பெரும்பகுதி வெண்மையும் சிறுபகுதி செம்மையும் உடையது. குருகு பரிபாகச் சிறப்பையும், வாசனாமலர் சேர்க்கை சிறிதுமுடைய தூய நிலையை உணர்த்தும் அடையாளம். அதனால்தான் நாரை தவம் செய்யும் முனிவர்களுக்கு உவமையாயிற்று. சங்கு முழுதும் வெண்மையானது. உலகியல் துறைதோறும் சென்றலைந்த சிந்தனை இன்று அருட் சக்தியின் கருணையினால் இருள் நீங்க-ஞானஒளி தலைப்பட மனம் ஒருமைப்படுகிறது; இறைவனை ஏத்த ஒருப்படுகிறது. அதனால் திருவடி தந்தருள்க என்பது பொருள் வழிபாட்டுக்கு ஒருமை இன்றியமையாதது. “ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்” என்ற சொற்றொடரும் “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை” என்ற அப்பர் திருப்பாடலடியும் “ஒருமையுடன்