பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/362

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நினது திருமலரடி நினைக்கின்ற” என்ற வள்ளலார் வாக்கும் எண்ணத்தக்கது. வழிபாடு அகலமாவதிற் பயனில்லை; ஆழ மாதல் வேண்டும், பொறிகள் நிகழ்த்தும் வழிபாடு போதாது. புலன்களை வழிபாட்டில் ஈடுபடுத்த வேண்டும். புறப்பூசையினும் அகப்பூசை உயர்ந்தது. அகப்பூசை கழனியில் பயிர். புறப்பூசை பயிருக்கு வேலி. அதனாலன்றோ, பூசலார் எழுப்பிய மனக்கோயில் கற்கோயிலினும் இறைவனுக்கு உவப்பாயிற்று. புறப்பூசை மணமற்ற மலர். அகப்பூசை மண மலர். அகனமர்ந்த அன்பில் ஒருமையுணர்வுடன் அவன் திருவடிக்கு ஒரு பச்சிலை சாத்துதல்-இல்லை, சாத்துவதாக எண்ணுதல் நூறாயிரங்கோடி அருச்சனைக்குச் சமம்.

பொழுது புலர்கிறது. அகஇருளும் நீங்க அமைதியாக அமர்ந்திடுக! உலகத்தை-உலகத்தில் நம்மோடு தொடர்புள்ள பொருள்களை ஒவ்வொன்றாக எண்ணி உள்ளத்தால் ஒதுக்குக; அவற்றினின்றும் விலகுக! ஒருநிலை எய்திடுக! ஒருவனை உன்னுக; அவனோடு ஒன்றாகிடுக; இந்தச் சீரிய நோன்பிற்கு உடலை வருத்த வேண்டாம்; உயிரை வருத்த வேண்டாம்; வீட்டை விட வேண்டாம்; காட்டைத் தேட வேண்டாம்; இருந்த இடத்திலிருந்தே இயற்றலாம். “எக் கோலம் கொண்டாலென்ன? ஏதவத்தைப் பட்டாலென்ன? முத்தர் மனமிருக்கும் மோனத்தே!” காலம் தாழ்த்தாதீர்! இறைவனை மனக்கோயிலில் பள்ளியெழுந்தருளச் செய்வீர்!

இன்னிசை வீணைய ரியாழின ரொருபால்
இருக்கொடு தோத்திர மியம்பின ரொருபால்
துன்னிய பிணைமலர்க் கையின ரொருபால்
தொழுகைய ரழுகையர் துவள்கைய ரொருபால்
சென்னியி லஞ்சலி கூப்பின ரொருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.

4