பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/366

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போல இறைவனை ஏதுக்களாலும், எடுத்த மொழிகளாலும் உய்த்து உணர்ந்து அறிந்த பிறகு அவனைக் காணும் வேட்கை அரும்புகிறது. அவ்வழியேதான் இறைவனைக் காணும் காட்சி கிட்டுகிறது. கடவுள், அறிவில் தலைப்படுபவன். அறிவினாலன்றிக் கடவுளைக் காண இயலாது. அதனால் “கேட்டறி யோம் உனைக் கண்டறிவாரை” என்றார்.

பூதங்களாகிய மண், புனல், அனல், கால், வெளி ஆகியவற்றில் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான். ஆயினும், இறைவன் சாதல்-பிறத்தலுக்கு உரியவனல்லன்.

“நினைப்புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதலல்லால்” என்ற சொற்றொடரில் புலவோரைப் ‘போற்றுவோர்’ என்ற பொருளில் குறிப்பிடுகின்றார். இன்று புலவோர் என்பது உலகியல் வழக்காகிவிட்டது. புலவோர் என்ற சொல், அருளியல் உலகில் தோன்றி வழக்கிற்கு வந்த சொல்! புலவோர் என்றால், புலன்களை உழுது பண்படுத்தி ஞானத்தில் முதிர்ந்திருப்பவர்கள். இவர்களே அந்தணர்கள்! இவர்களே ஞானிகள்! “புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன்” என்று சங்க நூல் பேசும். இன்று பெரு வழக்காகக் கூறுவதைப் போலப் “புலவோர்” என்பவர் இலக்கண - இலக்கியம் பயின்றவர் அல்லர்; தேவர்களும் அல்லர். புலன்களை வென்ற ஞானிகள் புலவோர், அவர்கள் இறைவனைப் பாடுவர்; ஆடுவர்!

“புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதலல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என்றதால் இந்தச் சிவஞானிகளுக்கும் சிவம் அனுபவத்திற்கு உரிய பொருளேயாம்; காட்சிப் பொருளன்று.

“சிந்தனைக்கும் அரியாய்” என்ற சொற்றொடரால் சிந்தையின் செயலாய் “நான் சிந்திக்கிறேன்” என்ற முனைப்பில் தன்னுடைய சிற்றறிவையே கருவியாகக் கொண்டு அறிய முற்படுதல். கண்ணுக்கு ஒளி உண்டேயானாலும், கதிரவன்