பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/367

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

355


ஒளியின்றேல் காட்சி ஏது? அது போல உயிர், இறைவனின் கருணையைப் பெற்று அவனுடைய கண்களையே தன் கண்களாகக் கொண்டு காண முயன்றால் அவனைக் காணலாம். “அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் காண்பார் யார்?” என்றும், “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்னும் வாக்குகளை அறிக!

இறைவன் தானே வலிய வந்து, உயிர்கள்பால் இரக்கம் கொண்டு, காண்பதற்குரிய திருமேனி கொண்டு வந்தருளித் துன்பங்களை நீக்கி ஆட்கொண்டருளும் கருணையை வியந்து “முன்வந்து ஏதங்கள் அறுத்தெமை ஆண்டருள் புரியும்” என்று பாடிப் பரவுகின்றார்.

பப்பற வீட்டிருந் துணருநின் னடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானிடத் தியல்பின்
வணங்குகின் றாரணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை யாண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.

6

இன்றைய பாடல், இறைவன் பிறப்பினை நீக்கி ஆட்கொண்டருளும் கருணையை வாழ்த்துகிறது.

“மங்கை நாயகனே! செந்தாமரை மலர்கள் பூத்த வயல்கள் சூழ் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இடையறாது தொடரும் பிறப்பை நீக்கி எமை ஆட்கொண்டு அடிமை கொண்டருளும் பெருமானே! பாசங்களை விட்டகன்று பரப்பரப்பன்றி நின்னையே நினைப்பற நினைக்கின்ற சிவஞானியர் பலர் வணங்குகின்றனர். திருத்தொண்டிற்குக் களமாக-பயனாக அமையும் மண்ணில் பிறந்து தமது அறியாமையை, அவ்வழி உள்ள தீமையை நீக்கிக் கொண்டு பக்குவம் அடைந்தார் பலர்.