பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/370

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மதுவளர் பொழிற்றிரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுவெமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு ளாயே

7

இறைவனை வணங்கும் முறைகளையும், வணங்கிக் கேட்கும் மரபுகளையும் இன்றைய பாடல் விளக்குகிறது.

“அமரர்களும், திருவருளின்பம் பழத்தின் சுவையென, அமுதின் சுவையென, அறிதற்கு அரிதென, அறிதற்கு எளிதென அறியார். அங்ஙனம் இருக்க ‘இது அவன் திருவுரு; இவன் அவன் எனவே’ எங்களை ஆண்டு கொண்டு இங்கு எழுந்தருளும் பெருமானே! தேன்மலர்ப் பொழில்கள் சூழ் உத்தர கோச மங்கையுள்ளானே! திருப்பெருந்துறையுறை அரசே! எம்பெருமானே! எங்களைத் தொண்டு கொள்ளும் முறை எது? என்று இரந்து கேட்கின்றோம். பெருமானே! திருப்பள்ளி எழுந்தருளி எமைப்பணி கொள்ளும் பாங்கினைக் கூறிடுக! பணியினைக் கொண்டிடுக!”

‘அது’ என்பது சிவானந்தம். சிவானந்தம் மனத்தின் உணர்வு தழீஇய நுகர்ச்சிக்குப் புலனாவது. அதற்குப் பெயரும் இல்லை! உருவமும் இல்லை! அதனால் ‘அது’ என்றார். பழச்சுவை, அமுதச் சுவை முதலியவற்றை இன்ன சுவையென அறிந்து கூற, முன்னர் அந்தச் சுவைகளைச் சுவைத்தோராலேயே முடியும். சிவானந்தம் அமரர்களால் ஒருபோதும் சுவைத்தறியப்படாதது. அதனால் ‘இதுபோல’ ‘அதுபோல’ என்று கூறி அலமருகின்றனர். சிவானந்தத்தைச் சுவைத்தறிதல் அருமையானதா? அல்லது எளிமையானதா? அதை எப்படி அமரர்கள் கூற முடியும்? அமரர்கள் அந்தத் துறையில் ஒரு சிறிதும் முயன்றறியாதவர்கள். அவர்கள் முயன்றதெல்லாம் போகம் பெற்றிட! தாம் உயர்ந்திட! தம்மைப் பலர் தொழுதிட-அன்றி அவர்கள் எப்பொழுது சிவானந்தம் நோக்கி முயன்றனர்? அத்துறையில் ஒருசிறிதும்