பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/373

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

361



படைத்தல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழில்களையும் அயன், அரி, உருத்திரன் என்ற மூவர் நிகழ்த்துவது இறைவனின் திருவருட் குறிப்பினாலேயாம். மூவரும் முத்தொழிலைச் செய்தாலும் பெருமானை அறியார்.

“நின்னடியார் பழங்குடில்தோறும் எழுந்தருளிய பரனே!”–‘பழங்குடில்’ என்பது குடிசயைன்று; உயிர்கள் உறையும் நுண்ணுடம்பே பழங்குடில், நுண்ணுடலில், உயிர்களின் உள்ளமே இறைவன் விரும்பிப்புகும் குடில். இந்த நுண்ணுடல் உயிருக்குப் பிறப்புக் காலம் தொட்டு வருவது. அதனால் பழங்குடிலாயிற்று! மண்ணில் உள்ள பழங்குடில் ஓலைகள் பிரிந்தும் கம்புகள் கலைந்தும் நைந்து இருக்கும். அதுபோல அடியார் உள்ளமும் பிறப்பில் தொடக்கத்தில் இருந்த மலக்கட்டுக் குலைந்து அன்பினால் நைந்து விளங்கும் என்பது உய்த்தறிக. “பழங்குடில் தொறும்” என்ற சொற்றொடர் வியப்பிற்குரியது. அளப்பில் உயிரினத் தொகுதியில் ஒவ்வோருயிரின் உள்ளந்தோறும் அவன் தவறாமல் புகுகின்றான்.

‘செந்தழல் புரை திருமேனியும் காட்டி’ என்பது இறைவனின் அருவ நிலையையும் ‘திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி’ என்பது அருவுருவ நிலையையும் ‘அந்தண னாவதும் காட்டி’ என்பது உருவநிலையையும் உணர்த்தியமை அறிக! உள்ளப் பெருங்கோயிலில் எழுந்தருளும் இறைவனையே ஆன்மநாயகனாக வழிபடுதல் வழக்கம். மாணிக்கவாசகருக்குத் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஆன்ம நாயகன்! முன், திருப்பெருந்துறை திருத்தலமல்ல, மாணிக்கவாசகரை ஆட்கொண்ட அருள் திருமேனி எழுந்தருளியதால் திருப்பெருந்துறை ஆயிற்று; திருத்தலம் ஆயிற்று! மாணிக்கவாசகப் பெருமானால் கோயிலாக்கப் பெற்றது. அதனால், ‘திருப்பெருந்துறையுறை கோயில்’ என்றார். திருப்பெருந்துறை, ஆட்கொண்டருளிய எம்பெருமானுக்கு அடைமொழி. இறைவன் குருநாதனாக எழுந்தருளி

கு.இ.VIII.24.