பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/390

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக்கு அஞ்சி, உள் சென்று
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட, அருகாக்
காமக் குரோதக் களை, அறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு, அம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து
புண்ணிய
அஞ்செழுத்து அருங்காய் தோன்றி, நஞ்சுபொதி
காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும்
பவள நிறம்பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை யதனினும் உறுசுவை யுடைத்தாய்க்
காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர
............”

என்று திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் அருளியுள்ளார். பட்டினத்தார் வழியில் நாமும் ஞான வேளாண்மை செய்திடுவோம்! ஞான உழவில் மனத்தைத் தூய்மை செய்வோம்! மனத்தினைக் காடு ஆக்காமல் “சிவம்” என்னும் பயிர் விளையும் கழனியாக்குவோம்!

மனத்தில் முகிழ்க்கும் சிவஞானத்தைச் சீலத்தால் பாதுகாத்துத் தொண்டு என்னும் தூயவேலி அமைத்துப் போற்றிப் பாதுகாப்போம்! மனம் சிவம். ஆனால் மண்ணுலகம் சிறக்கும். பட்டினத்தார் வழியில் ஞானஏர் உழவைப் பூட்டுக! ஞானஏர் உழவை சிறப்புற நடத்துக.