பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/397

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிழை தவிர்த்தாளும் பெருமான்!

385


திரிபுணர்ச்சியுடன் அறிவதே அறியாமை. திரிபுணர்ச்சியால் உலகம் துன்புறும்; அழியும்; அறியாமை நீக்கத்திற்கு ஞான நூல்களைக் கற்கவேண்டும். கற்கும் நூல்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை.

கற்பது, பழக்கமும், வழக்கமும் ஆகவேண்டும். நாள் தோறும் நூல்களைக் கல்லாதவர்கள் பிழை செய்கிறார்கள். ஞான நூல்களைக் கற்றால் மட்டும் போதாது அந்நூற் கருத்தினைக் கருதுதல் வேண்டும். சிந்தித்தல் வேண்டும். அங்ஙனம் கருதாததும், பிழையே!

இதயம் ஈரமாக இருத்தல் வேண்டும். “ஈர அன்பினர்” என்பார் சேக்கிழார். ஈரத்தின் விளைவு கசிதல்-உருகுதல். இறைவனை நினைந்து கசிந்துருகி அழாததும் பிழையே. வாழ்க்கையின் இன்பதுன்பச் சுழற்சிகளில் நினைக்க வேண்டாததை நினைக்கவும், நினைக்கக் கூடியதை மறக்கவும் வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இறைவனை நினையா திருத்தல் பிழை.

இறைவனின் திருவருளைத் தருவது ஐந்தெழுத்து. ஐந்தெழுத்தின் அருமையைத் திருமுறை அருளிய ஞானாசிரியர்கள் பாடியுள்ளனர். ஐந்தெழுத்தினை “வைத்த பொருள்” என்று கருதும்படி அப்பரடிகள் அறிவுறுத்துகின்றார். சுந்தரர், “மற்றுப் பற்றெனக்குன் திருநாமமே மனம் பாவித்தேன்” என்பார். ஐந்தெழுத்தினை எண்ணிச் சொல்லாததும் பிழையே!

இறைவன் போற்றுதலுக்குரியவன்; அவன் குறைவிலா நிறைவு; கோதிலா அமுது. அப்பொருளைப் போற்றித் துதி செய்தல் கடமை. அங்ஙனம் செய்யாததும் பிழை. கற்று, கருதி, கசிந்துருகி நின்று, நினைந்து, ஐந்தெழுத்து ஓதி, துதித்து வாழ்தல் பிழையிலா வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

கடவுள் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் விண்ணளந்து காட்டி வினை மறைப்பவை. நெடுந்