பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/401

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொல்லாமை வேண்டும்

389


அநீதி! ஆலயங்கள் என்ன செய்கின்றன? ஆம்! அவை இன்று வல்லமையாளர்களுக்குப் புகலிடம்! சான்றோர் என்ன செய்கின்றனர்; அவர்களைத் தேடிக் காணவேண்டிய திருக்கிறது. இந்த அநீதியை அறநெறிப் பார்வையில் அடிகள் அறிவிக்கிறார்!

ஒரு பெரிய பாம்பு; சிறிய பாம்பை விழுங்குகிறது. சிறிய பாம்பு, அதனினும் சிறிய தேரையை விழுங்குகிறது. தேரை, அதனினும் சிறிய பூச்சிகளை விழுங்குகிறது. இவை எங்கும், எல்லா இடத்திலும் வலிமையின்மையுடையன படும் அவதிக்கு எடுத்துக் காட்டு! அடிகள் ஏன் இதைக் கூறுகிறார்? ஓர் உண்மையை விளக்க முற்படுகிறார். பாம்பு தற்காப்புக்காகவே கடிக்கும். வலிந்து சென்று கடிக்காது. வலிந்து தீமை செய்தல் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லை. பாம்பைத் துன்புறுத்தாதார், பாம்பினாலும் துன் புறுத்தப்பட மாட்டார். “சான்றோர் அவைப்படின் பாம்பும் உய்யும்” என்பது கலித்தொகை. மனிதர்கள் தமக்குத் தீமை செய்யாதார் மாட்டும் தீமை செய்கின்றனர். ஏன்? அவர்களுக்கு நன்மை செய்தாருக்கேகூடத் தீமை செய்கின்றனர்.

மனிதர்கள் மேற்கொண்டு ஒழுக வேண்டிய அறத்திற் சிறந்தவை-துன்புறுத்தாமை, கொல்லாமை ஆகிய அறங்களாம். இதனை அகிம்சை யென்று அண்ணல் காந்தியடிகள் கூறினார். மகவெனப் பல்லுயிரையும் ஒப்ப நோக்கும் அருளுணர்வு வேண்டும்.

தற்செயலாகத் தன்னிடத்திற் பிறந்த மக்களே தம் மக்கள் என்று மட்டும் கருதி அன்பைச் சுருக்குதல் கூடாது.

அங்ஙனம் அன்பு சுருங்கினால் வறட்சியால் காய்தல், உவத்தல் ஏற்படும். அதனால் அறிவு மயங்கி நடுவுநிலை கெட்டு ஒழுக்கம் கெடும். ஒருவரை ஊட்டி வளர்த்தும், ஒருவரைப் பரிவு காட்டாது ஒதுக்கியே வாழ்தலும் கற்றவர்க்கும் அழகல்ல; தாய்மைக்கும் அழகல்ல.