பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/410

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பழுகுவார்கள். பரிவுரைகளையும், புகழுரைகளையும் குவிப்பார்கள். பின் தன்னுடைய மோசடி எண்ணம் நிறைவேறாத போது தூற்றுவர். ஆக, தவறான காரியங்களைத் தவறான வழிகளில் செய்து முடித்துக் கொள்ளும் நோக்கம் உடையவர்களே அவசரப்படுவார்கள்; பரபரப்பாக விளங்குவார்கள். இக்கருத்தை மாணிக்கவாசகப் பெருமானும் தமது திருவாசகத்தில் தெளிவாக விளக்குகிறார். அருளார்ந்த இன்ப வீடு; அவ்வீட்டுக்கப்பால் உள் நுழையப் பலர் காத்து நிற்கிறார்கள். நுழைந்து உட்செல்லும் தகுதியுடையோர் காத்து நிற்கிறார்கள். ஆனால், அத்தகுதியில்லா ஒருவர் தகுதியுடைய அடியாரின் மேம்பட்டவராக நடிக்கிறார். ஆனால் அவர், காத்திருக்கும் மற்ற அடியார்களோடு காத்திருக்கவில்லை. அவர்கள் எல்லோரையும் முந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைய விரைந்து முயற்சிக்கிறார். ஏன்? காத்திருக்கும் தகுதியுடைய அடியார்களுக்குக் காலந்தாழ்த்தியாகிலும் நிச்சயமாக இடம் கிடைக்கும். நடிப்பு வெளிப்பட்டால்..? ஆதலினால், விரைந்து இடம்பெற முயற்சிக்கிறார் என்ற கருத்தை விளக்கும் வண்ணம்,

“நாடகத்தால் உன்அடியார் போல்நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் முடையானே”

என்று குறிப்பிடுகிறார். மீண்டும் ஓரிடத்தில் ‘விது விதுப்பேனை விடுதி கண்டாய்’ என்றும் குறிப்பிடுகின்றார்.

அறம் பேசவந்த திருவள்ளுவரும், ‘ஆர அமரச் சிந்தித்துத் தேர்ந்து தெளிந்து முடிவெடுக்க வேண்டும்’ என்று வற்புறுத்துகின்றார். இக்கருத்தைத் ‘தேரான் தெளிவும்’ என்ற குறளாலும் ‘தெரிந்து செயல் வகை’ என்ற அதிகாரத்தாலும் நாம் பெறமுடிகிறது.

தருமை ஞான முதல்வர் வாழ்க்கையை வெற்றி கரமாக்க அருளிச் செய்த உபதேசத்தை எடுத்த எடுப்பிலேயே “பரபரக்க வேண்டாம்” என்றே தொடங்குகின்றார். ஆதலால்