பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/417

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27


காக்கை விரும்பும் கனி!


மானுட வாழ்க்கை குறைகளையுடையது. ஆயினும் குறைகளே உடையதுமன்று; குறைகளும் உண்டு; நிறைகளும் உண்டு. குறைவிலா நிறைவுடையது கடவுள் ஒன்றேயாம்! “குறைவிலா நிறைவு” என்று மாணிக்கவாசகர் பாராட்டுகிறார். “நன்றுடையான் தீயதிலான்” என்று திருஞானசம்பந்தர் பாராட்டுகின்றார். குறையின் விளைவு, தீமை; துன்பம்! நிறையின் விளைவு நன்று; இன்பம்! “இன்பம் காண் துன்பங்கள் இல்லாதான் காண்!” என்று அப்பரடிகள் பாராட்டுகின்றார்.

குறைகளும், நிறைகளும் கலந்ததே மனித வாழ்க்கை! ஆனாலும், குறைகள் இயல்பானவை என்றும், சரியானவை என்றும் நியாயப்படுதல் கூடாது. குறைகளினின்றும் விடுதலை பெறவே வாழ்க்கை; கல்வி; கேள்வி; அறிவு; சமயம்; இல்லற வாழ்க்கை; துறவற வாழ்க்கை ஆகிய அனைத்தும்!

அறிவறிந்த ஆள்வினை; பொருளீட்டம்; துய்த்தல் ஆகிய அனைத்தும் கூட, மனித உயிர் வாழ்க்கை குறைகளினின்றும் நீங்கி, நிறை பெறற்குரிய சாதனங்களே! ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் குறைகளும் உண்டு; நிறைகளும் உண்டு. குறைகளையும், நிறைகளையும் சீர்தூக்கி