பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/420

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஊழலைப் பற்றிய பேச்சு! இவை எடுத்துக் காட்டப்படுவதில்லை. முறையீட்டு மன்றங்களுக்கும் எடுத்துச் செல்வதில்லை. இங்ஙனம் இங்கு மங்குமாகவுள்ள குறைகளைத் தூற்றுவதையே தொழிலாகக் கொண்ட தாள்களும், மேடைகளும் வளர்ந்துவிட்டன.

ஒரு சார்புடையவர்கள் - பகையுணர்ச்சி யுடையவர்கள் குற்றங்களைப் பார்க்கிறார்கள். குணங்களை எடுத்துக் கொள்ளத் தவறுகிறார்கள்; இல்லை, மறுக்கிறார்கள்! ஆதலால், சிலர் இகழ்வதை ஒரு பொருளாகக் கருதத் தொடங்கினால் வாழவே முடியாது. ஆதலால், நன்னெறி ஆசிரியர் ஒருசிலர் இகழ்வதைப் பொருளெனக் கொள்ளற்க என்கிறார்.

காக்கை வேப்பம் பழத்தையே விரும்புகிறது. அதனால் வேப்பம்பழம் இனிமை யுடையதாகிவிடாது. காக்கை விரும்பாத மாம்பழம் சுவையில்லாததாகவும் ஆகிவிடாது. காக்கைகளைப் போல கருமை மனம் உடையோர் நின் குணங்களைப் பார்க்க மறுப்பர். கவலற்க!

அங்ஙனம் குறையே நோக்கி இகழ்பவர் நிறை நோக்கிப் பாராட்ட மறுப்பவர்தம் உளங்கொள நீ வாழ்தல் அரிது. காரணம் அவர்களுக்கு இகழுதல் ஒரு தொழில்; பழக்கம்! கவலற்க! நம்மை நாமே குறைகளும் நிறைகளும் நோக்கி நினைந்திடுவோம்! நாளும் குறைகளிலிருந்து விடுதலை பெற முயலுவோம்! இகழுக்கு அஞ்சியல்ல! நெறிமுறை வழிப்பட்ட வாழ்க்கையில் நிறைநலம் பெற வேண்டுமென்பதற்காக! என்கிறார்.

“உண்டு குணமிங்கு ஒருவர்க்கு எனினும்கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே-வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி”