பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/423

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நற்சொல் எது?

411


சொற் சுவையைவிடச் சொற் பயனே முதன்மை பெற செய்ய வேண்டும்.

நல்ல மனமுடையவர் ஒப்புக்குப் பேசத் தெரியாமல் போகலாம். புகழ்ந்து பிழைக்கத் தெரியாத அப்பாவிகளாக இருக்கலாம். உள்ளதை உள்ளவாறு சொல்கிறவர்களாகவும் இருக்கலாம். வன் சொல்லாகவும் இருக்கலாம். ஆயினும் சொல்கிறவர்களுடைய நன்னெஞ்சத்தைப் பொறுத்து வன் சொல்லும் கூடப் பயன் நோக்கிய இனிய சொல்லாக இருத்தல் உண்டு.

யாழ், வடிவத்தில் கோணலானது. அம்பு, வடிவத்தில் நேரியது. ஆயினும் இவ்விரண்டின் விளைவு வேறுபாடுடையது என்பார் வள்ளுவர்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.

என்பது திருக்குறள்.

தோற்றத்தில் நேரிதாக இருக்கும் கணை கொலை செய்கிறது. தோற்றத்தில் வளைவுகளைப் பெற்று இனிமையல்லாத தோற்றமுடைய யாழ் இன்னிசையைப் பொழிகிறது. இனிய பயனைத் தருகிறது.

பக்தியிற் பழுத்த நெஞ்சுடைய சாக்கிய நாயனார் எறிந்த கல், இறைவனுக்கு மலராயிற்று. கல்லையும் மலராக்கும் ஆற்றல், அன்பிற் கனிந்த இதயத்திற்கு உண்டு. காமவேள், இறைவன் மீது மலர்க்கணைகளையே தொடுத்தான். ஆயினும், கல்லை மலராக ஏற்றுக் கொண்ட இறைவன், காமவேளின் மலர்க்கணைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன்? விளைவு நோக்கியே!

ஆதலால், சொற்களில் சுவை நாடற்க! செவிக்கினியவாக மட்டும் உள்ள பயனற்ற சொற்களை நாடாதொழிக! சொற்களின் விளைவாகிய வாழ்க்கையின் பயனை நாடுக!