பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/426

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருக்கிறதே என்றெல்லாம் அங்கலாய்ப்பவர்களும் உண்டு. அவர்கள் “தனக்கு மிஞ்சியதே தான தர்மம்” என்ற பழமொழியினை எடுத்துக் காட்டி நியாயம் பேசுவர்.

தனக்கு மிஞ்சுதல் ஒருபோதும் உலகத்தில் நடக்கக் கூடிய காரியமில்லை. அதுவும், இன்றைய மனிதன் தேவைகளை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறான். அவன்-குறிப்பாக இந்தியன் அமெரிக்காவைப் பார்த்துத் தன் தேவைகளுக்குப் பட்டியல் தீட்டுகிறான்.

தேவை யென்பது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவும் தாங்கள் மேற்கொண்ட கடமைகளை முறையாகச் செய்தற்குரியனவுமாகிய நியாயமான தேவைகளாகும்.

நமது நாட்டில் இன்று கார் தேவையான பொருளா? அல்லது சுகத்தின் சின்னமா? அல்லது செல்வத்தின் எடுத்துக் காட்டா? அல்லது வருமான வரிக்குச் சரிக்கட்டா? என்ற வினாக்களை அடுக்கினால் ஒரு சிலருக்கே கார் தேவைப்படும். பலருக்கு அது செல்வத்தைத் துய்க்கும் ஒருவழி: சுகப்பொருள்; வருமான வரிக்குச் சரிக்கட்டு! ஏன்? ஈருருளை வண்டிகூட அப்படித்தான்!

இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்குச் சென்று பணி செய்து திரும்ப, இன்று ஈருருளை வண்டியை நாடி நிற்போர் பலர். இவர்களுடைய கால்கள், நடக்கும் சக்தியை இழந்துவிட்டன. தெளிவாகச் சொன்னால் இவர்களுக்கு உண்மையான தேவை நடைப் பயிற்சியே யாம்!

நோயின்றி வாழ இவர்களுக்கு இன்றியமையாதது நடையே! ஆனால் அதை உடலுக்குத் தராமல், காரிலும், ஈருருளை வண்டியிலும் பலர் பயணம் செய்வதால் நோய்க்கு ஆளாகின்றனர். ஆதலால் உண்மையான தேவை என்பது வேறு. மனிதன் உண்டாக்கிக் கொள்ளும் செயற்கைத் தேவை வேறு.