பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/431

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாயுமான சுவாமிகள்

419


காவிரிப்புனல் பாயும் நாட்டில்தான் இருக்கிறது. கம்பன் இராமகாதை இயற்றி அரங்கேற்றிப் புகழ் கொண்டதும், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற்குக் களம் அமைத்துத் தந்ததும் காவிரி வளம் கொழிக்கும் சோழ நாடே. தமிழகம் சிறப்புடையது. காவிரிப்புனலால் வளம் கொழிக்கும் சோழநாடு புகழ் பெற்றது. சிவநெறியும் செந்தமிழும் வளர்த்த-வளர்த்துக் கொண்டிருக்கும் நாடு, சோழநாடு. தமிழர்கள் கடவுள் நம்பிக்கையுடையவர்கள். தமிழர்கள் கடவுளைப் பயப்படக் கூடிய பொருளாக முன்னும் கண்டதில்லை. இனிமேலும் காணமாட்டார்கள். தமிழர் வாழ்வில் கடவுள் தாய்; தந்தை; ஆசிரியன்; தோழன். கடவுள், வாழ்த்துப் பொருள் மட்டு மல்ல; வாழ்வுப் பொருள். கடவுள் அழைத்துச் செல்பவன் அல்ல. ஆற்றல் மிக்க அன்பால் அழைத்தால் வருபவன். எங்கே? எங்கே? என்று தேடி வருபவன். உண்கின்ற சோறாகவும், தின்கின்ற வெற்றிபாக்காகவும் இருந்தருள் செய்பவன். செந்தமிழ் நாட்டில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பலப்பல.

தமிழர் கடவுளை அம்மையப்பராகவும் அம்மையாகவும் வழிபட்டு வந்துள்ளனர். “தாயிற் சிறந்த தாயவுடையவன்” என்றும் “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்றும் சிவபெருமான் தாயினும் நல்லானாக வந்தருளும் பாங்கினை அறிக; உணர்க.

சிவன், தாயாக அருள் செய்வான் என்பதற்கு ஓங்கி உயர்ந்து நிற்கும் சான்று, திருச்சிராப்பள்ளி தாயுமானார் திருக்கோயில். ஒருகாலத்தில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரிக்கு அப்பால் உள்ள சிற்றூரில் ஒரு பெண்ணுக்குப் பேறு காலம். மகப்பேறு எளிதில் அமைய, தாயை எதிர் நோக்குகிறாள். தாயும் மருந்து முதலியன வாங்கிக் கொண்டு மகள் வீட்டுக்குப் பயணமானாள். ஆனால் காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம் தாயின் பயணத்தைத் தடுத்து