பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/434

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதம்
சாரும் நாள் எந்நாளோ?”

என்ற வரி தாயுமானவரின் ஞானவேட்கையைப் புலப்படுத்தும். தாயுமானவர் சிவஞான சித்தி நெறி பயின்றவர். ஆதலால் சித்தாந்த மரபுகளைத் தழுவியனவாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

சித்தாந்தம் என்றும் உள்பொருள் மூன்று என்ற கொள்கையுடையது. அவையாவன: கடவுள், உயிர், உயிரை இயல்பாகப் பற்றிய ஆணவம். இவை மூன்றும் என்றும் உள்ளவை. சிவத்திற்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை. பழைய மதங்களில் சங்கரரின் மாயா வாதம் மட்டும் “நானே கடவுள்” என்று கூறும். அங்ஙனமாயின் உயிர்க்குள்ள குற்றங்குறைகளுக்கு யார் பொறுப்பேற்பது? இந்தக் கருத்து அறிவியல் உலகில் நிற்காது. அதனால்தான் விளம்பரத்தால் தூக்கி நிறுத்த முயல்கின்றனர். தத்துவச் சிந்தனையாளர் மத்தியில் எடுபடாது; விலை போகாது.

தாயுமானவர் சித்தாந்த மரபு நெறியில் “என்று நீ அன்று நான் உன்னடியன் அல்லவோ!” என்று அருளிச் செய்துள்ள பாங்கினை அறிக. சைவசித்தாந்த சமயநெறியின் உயிரைப் பற்றிய சிறந்த கோட்பாடாவது உயிர். சார்ந்ததன் வண்ணமாதல். உயிர், ஆணவத்தைச் சார்ந்த நிலையில் ஆணவம் நிற்கும். சிவத்தைச் சார்ந்திருக்கும் பொழு சிவமாக விளங்கும்.

“அறியாமைச் சாரின் அதுவாய் அறியும்
நெறியான போது அது வாய் நிற்கும்”

என்பார். ஆணவம் உயிரின் அறிவியல்பை மறைப்பதால் ஆணவத்தை அறியாமை என்று கூறும் மரபுண்டு. உயிர்கள் பிறப்பும் இறப்பும் இல்லாதவை. உயிர்கள் அறிவித்தால் அறியும் இயல்பின. உயிர்கள் பலப்பல என்ற சிவநெறிக் கொள்கைகள் தாயுமானவர் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.