பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/435

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாயுமான சுவாமிகள்

423



ஆணவத்துடன் இரண்டறக் கலந்து கிடந்த உயிரை இறைவனின் தண்ணருள் மாயை, கன்மங்களைக் கூட்டிப் பிறப்பை நல்குகிறது. மாயையும் கன்மமும் கெடுக்கும் மலங்களல்ல. ஆற்றுப்படுத்தும் மலங்கள். சித்தாந்த மரபுவழி முதலில் ஆன்மா, தன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின்தான் கடவுளை அறிதல் இயலும். இருளும் ஒளியும் ஓரிடத்தன. ஆனால், ஒளிமேவிய நிலையில் இருள் நீங்கும். உயிர், சிவமாய அறிவுச் சார்ந்து விடின் அறியாமை அகலும். அறியாமை தலைகாட்டாது. காரிட்ட ஆணவக் கருவறையிலிருந்து ஞான உலகிற்கு உயிரைக் கொண்டு வரத் திருவுள்ளம் கொண்டு கருவிகள் - பொறி, புலன்களுடன் கூடிய உடலினைத் தந்து பிறப்பில் ஈடுபடுத்துகின்றான் இறைவன். உயிர்க்கு வழங்கப்பெறும் பிறப்பு, மருத்துவம் செய்தல் போலவேயாம். இறைவன் உயர்க்குயிராய் நின்று ஆண்டருள் செய்கின்றான். இறைவன் உணர்த்தும் பொழுது உயிர் உணர்கிறது. ஆனாலும் உயிரை, அறிவுப் பொருள் என்று சொல்லும் வழக்கும் இருக்கிறது. இதனைத் தாயுமானவர்,

“நீ யுணர்த்த நான் உணரும் நேசத் தாலோ
அறிவென்றே எனக்கு ஓர் நாமம் இட்டது”

என்று அருளிச் செய்து விளக்குகின்றார். உயிர் நிலையில் கடவுளை அறிதலுக்குரிய உபாயத்தைத் தாயுமானார் எடுத்துக்கூறி விளக்குகின்றார்.

“தன்னை அறிந்து அருளே தாரகமாய் நிற்பதுவே
உன்னை அறிதலுக்கு உபாயம் பராபரமே”

என்பது தாயுமானார் வாக்கு உயிர் சிவத்தைச் சார்ந்தாலே இன்பம் மற்றையது எதுவும் உயிர்க்கு இன்பம் தாரா.

தன்னை யறிந்தால் தலைவன் மேல் பற்றலது
பின்னையொரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே!