பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/437

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளலார் நெறி I

425


நம்மவர்கள் போற்றத் தெரிந்தார்கள் - புகழக் கற்றுக் கொண்டார்கள். (பஜனை மடத்தில் வைத்து வழிபாடு செய்யக் கற்றுக் கொண்டார்கள். மற்றபடி அவற்றை நடை முறைக்குக் கொண்டு வரவில்லை.)

இந்த நாட்டில் வள்ளலார் பிறந்தார் - திரும்ப ஒரு வள்ளலார் பிறந்து வந்தாலும்கூட இந்தக் காரியம் முடியுமா என்பது எனக்குச் சற்று ஐயப்பாடுதான். இன்று நேற்றல்ல - ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றைப் பார்க்கிறேன். இந்த நாட்டு வரலாற்றில் ஒரு 300 அல்லது 500 ஆண்டுகள் ஓர் ஒழுக்க நெறியைச் சேர்ந்தாற்போல தமிழர்கள் பின்பற்றியதாகக் கூற முடியாது. நாம் எவ்வளவுதான் பேசினாலும், எவ்வளவுதான் விடிய விடியக் கதறினாலும் இந்த நாட்டு மக்கள்-கதறுகிறவர்களும் கேட்கிறவர்களும் செயல்படமாட்டார்கள். இப்படி இந்த நாட்டின் போக்கு அமைந்திருப்பதைக் கண்டு நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். அப்படியிருந்தும் எனக்கு ஏமாற்றமும் தோல்வி மனப்பான்மையும் ஏற்பட்டும்கூட நான் தொடர்ந்து எனது பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன் என்றால், இன்னும் எனக்கு வயது நிறைய ஆகாததால் ஒருகால் என் தலைமுறையில் முடிந்தாலும் முடியலாமே என்ற ஆசைதான். ஆனாலும் இராமலிங்கர் கூறியதுபோல, கடைவிரித்தேன்- கொள்வாரில்லை- கட்டிக்கொண்டேன் என்று சொல்லும்படியாக, இந்தத் தலைமுறைத் தமிழர்கள் என்னை விட்டுவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த நம்பிக்கை பொய்க்கக் கூடாது என்று சொல்ல ஆசைப்ப்டுகிறேன்.

அருள்நெறித் திருக்கூட்டத்தினர் இந்த சன்மார்க்க சங்கங்களில் கலந்து கொள்ளக் கூச்சப்படுகிறார்கள் என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை ஏறாத மேடையில்லை. ஏறாத மேடை ஏறுகிற மேடை என்ற வேறுபாடு எனக்கில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். என்னோடு

கு.இ.28.