பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/441

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளலார் நெறி I

429


சுற்றிக் கட்டப் பெற்றுள்ள காக்காய்த் தகடு கண்ணிலே குத்திக் காயப்படுத்தி விடும்.

‘கண்மூடிப் பழக்க மெல்லாம் மண் மூடிப்போக’ என்று பாடினார் வள்ளலார். என்ன கண்மூடிப் பழக்கம்?

நம் நாட்டில் பொதுவாக இருக்கிற ஒரு குறை, ஏன் என்று கேட்டால் பாவம் என்கிற மனோபாவம். தாயை மகள் கேள்வி கேட்டால் தவறு! தகப்பனை மகன் கேள்வி கேட்டால் தவறு! ஆசிரியரை மாணாக்கன் கேள்வி கேட்டுவிட்டால் வந்தது ஆபத்து! இவற்றிற்கெல்லாம் மேலாக, மதத்தின் தலைவரை மக்கள் கேள்வி கேட்டு விட்டால் இந்த உலகமே பிரளயத்தில் அழிந்துவிடும். இங்கு மதத்துறையில் இருக்கிறவர்கள் மக்களை அச்சுறுத்தியதாலேயே இந்த நாட்டின் ‘மதம்’ கெட்டுப் போய்விட்டது. மக்களிடத்தே அச்சம் பரவியுள்ளது!

கேள்வி கேட்க முடியவில்லை. இதைத்தான் வள்ளலார் கண்மூடிப் பழக்கம் என்றார். பலருக்குக் கருத்தில்லை - கருத்தோடு தொடர்பும் இல்லை. கண்ணை மூடிக்கொண்டனர். எனவே கண்மூடிப் பழக்க வழக்கங்கள் மலிந்தன.

நம் நாட்டிலே அர்ச்சகர் வீட்டிலே அர்ச்சகன் பிறந்து விடுகிறான். அவனுக்கு ஞானம் வேண்டாம்; ஒழுக்கம் வேண்டாம்; அறிவுகூட வேண்டாம். ஆனால் தாசில்தார் வீட்டிலே தாசில்தார் பிறப்பதில்லை-தண்டல் நாயகம் வீட்டில் தண்டல் நாயகம் பிறப்பதில்லை.

பொதுவாகப் பலரிடம் ஏன் செய்கிறீர்கள் என்றால் தெரியாது! எதற்காகச் செய்கிறீர்கள் என்றால் தெரியாது! இதைச் செய்ததால் நீங்கள் என்ன பயனைப் பெற்றீர்கள் என்றால் தெரியாது! இதைச் செய்ததால் எத்தகைய உணர்வைப் பெற்றீர்கள் என்றாலும் பதில் கிடைக்காது. இந்த நிலைமையில் பரவியிருந்த பழக்க வழக்கங்களைப் பார்த்துத் தான் ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ என்றார் இராமலிங்கர். இப்படி நாம் சொல்லுவதால்