பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/447

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளலார் நெறி II

435


வள்ளற் பெருமான் பழைமைக்கு இளமையும், எழிலும் தந்து, புதுமை நெறி போற்றினார். வள்ளற் பெருமானின் புதுமை, வறட்சித் தன்மையுடையதன்று; வளமான புதுமை; அன்பினை, அருளினை அளித்திடும் புதுமை. மனித குலத்திற்குப் பொதுமை நெறி காட்டிய புதுமை.

வள்ளலார், சீர்திருத்தம் செய்ய முனைந்தவரல்ல. ஆனால், அவருடைய அனுபவத்தில் சீர்திருத்தம் முகிழ்த்தது. அறிதோறும் அறியாமை தோன்றுதலும் அறிவு வளர்தலும் இயற்கையாதல் போல அனுபவ வளர்ச்சி, படிப்படியாகக் குறைகளைக் கடந்த நிறைக்கு அழைத்துச் செல்லும். அறிவில் முகிழ்க்கும் புதுமையை விட அனுபவத்தில் முகிழ்க்கும் புதுமை நிறையுடையது; பயனுடையது. வள்ளற் பெருமான் படிப்படியாகத் தம்முடைய அனுபவ அறிவு முதிர்ச்சியடைந்தது என்பதை எடுத்துக் கூறியுள்ளார். வள்ளற் பெருமான் தம்முடைய அனுபவ நெறியைப் பின்வருமாறு உணர்த்துகின்றார்;

“சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம்
அருட்பெருஞ் சோதியென் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீயறிந்தது நான்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே!”

இந்து சமூகத்தில் உள்ள சாதி வேற்றுமை மிகக் கொடுமையானது. இந்தச் சாதி வேற்றுமையை அகற்ற திருவள்ளுவர், அப்பர், உடையவர், இராமாநுசர், மாணிக்கவாசகர், சேக்கிழார் போன்ற சான்றோர்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கின்றனர். அந்த வரிசையில் வள்ளலார் தோன்றி, சாதி வேற்றுமைகளைக் கடுமையாகச் சாடினார்.