பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/449

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளலார் நெறி II

437



வள்ளற் பெருமான் சமூக நெறிகளைக் கூடப் படி முறையிற் கருதினாரே தவிர, அவைகளையும் கடந்த பொதுமை உலகம் தோன்றுதலையே விரும்பினார். வள்ளற் பெருமான் சாதிகளை வெறுத்ததைப் போலவே, சமய நெறிகளையும், மதங்களையும்கூட வெறுத்தார். காரணம் அவை மனித உலகத்தில் இன்ப அன்பினை வளர்த்து அமைதியை வழங்குவதற்குப் பதிலாகப் பகையை வளர்த்துக் கலகம் விளைவித்தன. மனித உலக வரலாற்றில் நிகழ்ந்த போர்களைக் கணக்கெடுத்தால் அவைகளில் மிகுதியானவை சமய-மதச் சண்டைகளாகவே இருக்கும். சமயத் தத்துவங்கள், மதக் கொள்கைகள் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப் பெற்றன. பிரச்சார முறை தோன்றும் பொழுது நிறுவனங்கள் தோன்றும். நிறுவனங்கள் தோன்றியவுடன் தத்துவங்கள்-கொள்கைகள் பின் தள்ளப்பட்டு நிறுவனம் முன்னிலைப் படுத்தப் பெறும். நிறுவனம் தோன்றியவுடனேயே அதன் நிழலாக உடைமைகளும் அதிகாரமும் தோன்றும். தத்துவங்களும், கொள்கைகளும் நெறி திறம்பும் திருப்பு முனை, நிறுவனத் தோற்றமேயாகும். நிறுவனம் என்னும் பொழுது விதிமுறைகளாலும் சட்டங்களாலும் கட்டுக் கோப்புகளாலும் காவல்களாலும் கெடுபிடிகளுக்காளாகும் அமைப்பினையே நாம் குறிப்பிடுகின்றோம். ஒரு காலத்தில் திருவானைக்கா, திருக்காளத்தி ஆகிய திருக்கோயில்களில் விலங்குகளும், வேடர்களும் சென்று வழிபாடு செய்திருக்கின்றனர். அந்தச் சூழ்நிலையில் அவை நிறுவனங்களல்ல. அவை நிறுவனங்களானவுடன் பூசனை செய்ய ஒரு சாரார் உரிமை ஆதிக்கம் பெறுகின்றனர்; கதவு கால் கொள்கிறது; பூட்டும் சாவியும் இடம் பெறுகின்றன. முடிவாக, இன்று நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் பெறுகிறது. இவை நிறுவனத்தின் அடையாளங்கள்.

அதுபோலவேதான் தத்துவப் பிரச்சாரம், யாருக்காக செய்யப்படுகிறதோ அவர்களாலேயே பாதுகாக்கப் பெற