பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/452

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடமெனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ.”

என்று ஐயத்திற்கிடமின்றித் தமது கொள்கைக்கு விளக்கம் தருகின்றார்.

வள்ளற் பெருமான் மனித உலகத்தைப் பேதப்படுத்தி - பிரிவு படுத்தியிருந்த சாதி, சமய வேறுபாட்டுச் சுவர்களை இடித்துத் தகர்த்தார். வள்ளற் பெருமான் உயிர்க்குல ஒருமைப்பாடு கண்டார். வள்ளற் பெருமான் கண்ட பொதுமை நெறி கடவுள் நம்பிக்கையில் தோன்றிய பொதுமை நெறி. கடவுள் நம்பிக்கையில்லாத பொதுமை நெறி நம்மை ஆட்கொள்ளாதிருக்க வேண்டுமானால் நாம் வள்ளலாரின் பொதுமை நெறியை வாழ்க்கையின் சீலமாக்க வேண்டும். வள்ளற் பெருமான் வேற்றுமை வெப்பம் தணிக்கப் பெய்த கருணை மழை; இருளிடை இடறித் தடுமாறி அலைந்த மனித குலத்திற்கு அருளுடைச் சுடரைத் தந்த ஞானப் பேரொளி. வள்ளற் பெருமான் கண்ட பொதுமை நெறி வையகத்தில் மலர்க!