பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாசகர் உலகியல் கருதியும் ஆட்சிநிலை கருதியும் பொய் சொல்ல நேரிட்ட நிலையும் இருந்திருக்கலாம்.

அதனால் “பொய்ம்மையே பெருக்கி” என்றார். ஏன்? ஆவணி மூலத்தன்று குதிரை வரும் என்று சொன்னதும் நம்பிக்கையே தவிர, பொய் என்று கொண்டாலும் தவறில்லை. அமைச்சுப் பதவியிலும் இன்ன பிற பணிகளிலும் பொழுது கழிந்து போவதை எண்ணி வருந்திப் “பொழு தினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன்” என்றார் போலும்!

அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!

(பிடித்தபத்து-3)

அம்மையப்பன் திருவருட் சிந்தனை காலத்தை வென்று விளங்கத் துணை செய்யும். ஆதலால், ஆன்மா காலத்தை வென்று விளங்கும்; பொய்மையினை வெற்றி பெறும். எனவே அம்மையப்பனை எண்ணுக!

கடவுட் காட்சி

மாணிக்கவாசகர் தம்மை, இறைவன் ஆட்கொள்ளுதற்குரிய தகுதியின்மையைப் பலகாலும் உணர்கின்றார். எடுத்தோதுகின்றார். அதேபோழ்து தம்மை இறைவன், தாமே வலிய ஆட்கொண்ட பாங்கினையும் வியந்து வியந்து நன்றிப் பெருக்குடன் பாடுகின்றார்.

இறைவன் திருவருளைப் பெறுவதற்கு ஒழுக்கம் தேவை; நல்லொழுக்கம் தேவை; புலனில் அழுக்கு அறவே