பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

37


கூடாது. தவம் செய்யவேண்டும். ஆன்மா சிவத்தையே நினைத்து தவம் செய்யவேண்டும். உடல் பிறருக்கென முயலும் நோன்பு நோற்க வேண்டும். இறைவன் திருவருளில் தோய்ந்த செறிவு பெறவேண்டும். இறைவனைக் கண்டுணரும் அறிவு வேண்டும்.

இவையெல்லாம் பெறாவிடில் இந்த உடம்பு தோற்பாவை போலத்தான்! மாயையினாலாய மயக்கத்தினையும் காட்டி, அம் மயக்கத்தினின்றும் கரையேறுதலுக்குரிய வழியையும் காட்டித் திருக்கோலங்காட்டி இறைவன் ஆண்டருளிய பெற்றிமையை விளக்குகின்றார்.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் கடவுளைக் கண்டார்; பேசினார். “கண்ணால் யானும் கண்டேன் காண்க!” என்றருளிச்செய்துள்ளமை அறிக. காட்சியில் மனிதக் காட்சி ஒன்று. கடவுட் காட்சி பிறிதொன்று. இரண்டும் தம்முள் வேறுபட்டவை, என்பதை ஓர்க!

ஒரு மனிதனைத் தொலைவில் பார்க்கும்போது அவன் உருவம் தெரியும். அண்மித்த நிலையிலும் உருவம் தெரியும். அடுத்து நெருங்கிய நிலையில் நிறம் தெரியும். கடவுட் காட்சி அப்படியல்ல. தொலைவில் நிறம் தெரியும்; அடுத்து உருவம் தெரியும்; அடுத்து உறுப்பு - திருவடி தெரியும் என்பதை அறிக.

“வண்ணந்தான் சேயதன்று எளிதே யன்று
அனேகன் ஏகன் அணுவணுவில் இறந்தாய் என்றங்கு
எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமா றறியாத எந்தாய் உன்றன்
வண்ணந்தான் அது காட்டி வடிவு காட்டி
மலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவா மற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக் கேனே!

(திருச்சதகம்-25)