பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

39


முடியாக் காலம்தொட்டுப் பாலூட்டிச் சீராட்டி, வளர்ப்பவள் தாய்! உடலை, உயிரை, உணர்வை வளர்ப்பவள் தாய்.

“தாய்” - என்று பெயர் பெற்றவர்களெல்லாரும் நற்றாய் ஆகிவிடுகிறார்களா என்ன? அவருள்ளும் ஒரு சில தாய்மார்களே நற்றாய்கள்! தாய்மார்களில் பலர் சிறந்து விளங்காமைக்குக் காரணம் படைப்பின் குறை அன்று.

சமூக அமைப்பிலும் வளரும் சூழ்நிலையிலும் மிகச் சிலரே நற்றாய்களாகச் சிறந்து விளங்குகிறார்கள்! சான்றாகப் பல தாய்மார்கள் குழந்தைகள் அழுதாலும் உடன் பாலூட்டுவதில்லை? ‘சனியன்’ என்ற வசைதான் கிடைக்கும்.

சில தாய்மார்கள் அழுத குரல் கேட்டவுடன் பால் ஊட்டுவார்கள். அழுத பிறகு பாலூட்டும் தாய்மார்களே மிகுதி. அதனாலேதான் “அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்ற பழமொழி பிறந்தது போலும். அழுத பிறகு பாலூட்டும் தாய் மோசமானவளல்லள். ஆனாலும் அவள் நற்றாய் என்ற தகுதி பெற இயலாது.

மிகமிகச் சில தாய்மார்கள் காலக் கணிப்பின்படி குழந்தைக்குப் பசி வரும் என்று உணர்ந்து உரிய காலத்தில் பாலூட்டுவர். இவர்களே நல்ல தாய்மார்கள்! இவர்கள் குழந்தையை அழவிடமாட்டார்கள்; குழந்தையின் நலனில் முழுப் பொறுப்பேற்று, நினைந்து ஊட்டும் தாய்மார்கள் - நல்ல தாய்மார்கள்!

மாணிக்கவாசகருக்கு இவ்வளவில் மனநிறைவு இல்லை. நினைந்தூட்டும் தாய்கூடச் சில நேரங்களில் குழந்தையை மறந்து விடுகிறாள்! நினைப்பு என்பதே மறதியைத் தொடர்ந்து வருவதுதானே! மாணிக்கவாசகர் குழந்தைகளை ஒரு நொடிப் பொழுதும் மறக்காத தாயை நினைவூட்டுகிறார்.

ஆம்! மாணிக்கவாசகரா இறைவனை அழைத்தார்? மாணிக்கவாசகரை இறைவனே தொடர்ந்து வந்து குருந்த